April 22, 2026

தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகித்த திமுகவினர் மீது வழக்குப் பதிவு

சென்னை: தேர்​தல் நடத்தை விதி​களை மீறிவாக்​காளர்​களுக்கு ரூ. 8 ஆயிரத்​துக்​கான கூப்​பன்​களை விநி​யோகித்த திமுக​வினர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​வ​தாக, தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, வழக்கை முடித்து வைத்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் கோவை தெற்​கு, பாலக்​கோடு, பர்​கூர், அண்​ணாநகர் மற்​றும் கும்​பகோணம் உள்​ளிட்ட பெரும்​பாலான தொகு​தி​களில் திமுக​வினர் ரூ. 8 ஆயிரத்​துக்​கான கூப்​பன்​களை தேர்​தல் நடத்தை விதி​களை மீறி சட்​ட​விரோத​மாக விநி​யோகித்து வரு​வ​தாகக் கூறி, அதி​முக வழக்​கறிஞரணி துணைச் செய​லா​ள​ரான ஆர்​.ஏ.எஸ்​.செந்​தில்​வேல் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

அதில், “திமுக ஆட்​சிக்கு வந்​தால்ரூ.8 ஆயிரத்​துக்​கான கூப்​பன் வழங்​கப்​படும் என்​றும், இதன்​மூலம், வீட்டு உபயோகப் பொருட்​களை வாங்​கிக் கொள்​ளலாம் என்​றும் தேர்​தல் வாக்​குறுதி அளித்​துள்​ளது. இந்த வாக்​குறு​தியை வெற்றி பெற்று ஆட்​சிக்கு வந்​தால் மட்​டுமேசெயல்​படுத்த முடி​யும்.

ஆனால், திமுக​வினர் கோவை தெற்​கு, பர்​கூர், பாலக்​கோடு, அண்​ணாநகர், கும்​பகோணம் உள்​ளிட்ட பல்​வேறு தொகு​தி​களில் வாக்​காளர்​களை ஏமாற்​றும் வகை​யில் ரூ. 8 ஆயிரத்​துக்​கான பரிசுக் கூப்​பன்​களை வழங்கி தேர்​தல் நடத்தை விதி​மீறலில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

முதல்​வரின் புகைப்​படம் மற்​றும் வரிசை எண்​ணுடன் கூடிய இந்த கூப்​பன்​களை சில தொகு​தி​களில் வேட்​பாளர்​களே நேரடி​யாக வாக்​காளர்​களுக்கு விநி​யோகித்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக, ஆதா​ரங்​களு​டன் புகார் அளித்​தும் தேர்தல் ஆணை​யம் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, சம்​பந்​தப்​பட்ட திமுக வேட்​பாளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க​வும், விநி​யோகிக்​கப்​பட்ட பரிசு கூப்​பன்​களை பறி​முதல் செய்​ய​வும் தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்​.ஏ. தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது தேர்​தல் ஆணை​யம் தரப்​பில், “திமுக சார்​பில்வாக்​காளர்​களுக்கு ரூ. 8 ஆயிரம் கூப்​பன் விநி​யோகம் தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

சம்​பந்​தப்​பட்ட கட்​சிக்​கும் விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிப​தி​கள், வழக்கை முடித்து வைத்து உத்​தரவிட்​டனர்.

Spread the love