August 7, 2026

‘தொகுதி மறுவரையறை’ ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திமுக நிபந்தனை

சென்னை: ‘தொகுதி மறுவரையறை’ தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக எம்.பி.க்களுக்கு தவெக அரசு அழைப்பு விடுத்த நிலையில், “அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” என்று முதல்வர் விஜய்க்கு திமுக நிபந்தனை விதித்துள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் திமுக இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை.

நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று திமுக-வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை.

முறையற்ற தொகுதி மறுவரையறையால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே திமுக-வும், எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினும்தான் என்பதை நாடறியும்.

சென்னையில் இதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைத்தோம்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் இருந்தபோதே, “தேர்தல் கூட எங்களுக்குப் பிறகுதான்; தமிழகத்தின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதுதான் எங்களது முதல் பணி” எனப் பிரகடனம் செய்து, தமிழகத்தில் உள்ள இல்லங்களின் முன் கருப்புக் கொடியேற்ற அழைப்பு விடுத்து, அந்தச் சட்ட முன்வரைவின் நகலை எரித்து எதிர்ப்புக் காட்டியவர்தான் எங்கள் தலைவர் ஸ்டாலின்.

எனவே, இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.

ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழகத்தில் உள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழக அரசிடம் திமுக முன்வைக்கிறது.

புதுக் கூட்டாளியான காங்கிரஸின் மனம் புண்படும் என்பதால் மேகேதாட்டு விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது.

தொகுதி மறுவரையறையின் காரணமாக தமிழகத்துக்கான பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாகக் திமுக இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகேதாட்டு அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை.

தமிழகத்தின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் தவெக அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தலைமையில்…

தொகுதி மறு​வரையறை மசோதா குறித்து விவா​திப்​ப​தற்​கான அனைத்​துக் கட்​சிகளின் எம்​.பி.க்​கள் கலந்​தாய்​வுக் கூட்​டம் முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் நாளை (ஆகஸ்ட் 8) நடை​பெறுகிறது.

நாடாளு​மன்​றத்​தின் மழைக்​காலக் கூட்​டத்​தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இதில் திருத்​தப்​பட்ட தொகுதி மறு​வரையறை மசோ​தாவை மீண்​டும் கொண்​டுவர மத்​திய அரசு முயற்​சிப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில், தொகுதி மறு​வரையறை பணி​கள் குறித்து விவா​திப்​ப​தற்​காக தமிழக எம்​.பி.க்​கள் ஆலோ​சனைக் கூட்​டத்​துக்கு முதல்​வர் விஜய் அழைப்பு விடுத்​துள்​ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட அறி​விப்​பில், “மத்​திய அரசால் மேற்​கொள்ள உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ள தொகுதி மறு​வரையறை பணி​கள் மற்​றும் அதனால் தமிழகத்​துக்கு ஏற்​படும் தாக்​கங்​கள் குறித்​து, மாநில எம்​.பி.க்​களின் கலந்​தாய்​வுக் கூட்​டம் நாளை (சனிக்​கிழமை) மதி​யம் 3 மணிக்கு சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நடத்​தப்பட உள்​ளது. இதற்கு முதல்​வர் விஜய் தலைமை வகிப்​பார்.

இதற்​கான அழைப்​பிதழ் டெல்​லி​யில் உள்ள தமிழ்​நாடு இல்​லத்​தின் மூலம் அனைத்து மக்​களவை மற்​றும் மாநிலங்​களவை உறுப்​பினர்​களுக்கும் அனுப்​பப்​பட்டு வரு​கிறது” என்று கூறப்​பட்​டுள்​ளது. கா​விரி நதிநீர் விவ​காரத்​தில் அனைத்​துக் கட்​சிகளின் கூட்​டத்தை தவெக தவிர்த்​து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

Spread the love