சென்னை: தொழில் வளர்ச்சியில் மட்டுமல்ல, தொழிலாளர் நலனிலும் தமிழகத்தை முன்னணி மாநிலமாக்குவோம் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) சார்பில், ‘சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்’ என்ற தலைப்பிலான ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது.
இக்கருத்தரங்கை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக திகழ்பவர்கள் தொழிலாளர்கள்.
அந்த வகையில், தொழிலாளரின் குரலாக நின்று, இந்த கருத்தரங்கை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி, ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடன் நடத்தப்படுபவராகவும், முன்னேறும் வாய்ப்பை பெறுபவராகவும் இருக்கும்.
வெற்றி தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் உறுதியாக செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், தொழிலாளர் நலனிலும் நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம். இவ்வாறு அமைச்சர் முகமது பர்வேஸ் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கொ. வீரராகவ ராவ், தொழிலாளர் நல ஆணையர் மா.வள்ளலார், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் செ.ஆனந்த், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) இயக்குநர் மியாமோட்டோ மிச்சிக்கோ, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் பல்லவி மான்சிங், முதுநிலை திட்ட அலுவலர் திவ்யா வர்மா, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் ஆர்.செந்தில் குமாரி, இணை இயக்குநர்கள் பெ.சுப்ரமணியன், மு.வி. கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.
மனிதவளத் துறை வல்லுநர்கள், நலப்பணி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், மின்னணுவியல் உற்பத்தித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

More Stories
டெல்லி எஜமானர்களைப் பகைக்க அஞ்சும் ‘சோபா மாடல்’ முதல்வர்: மேகதாது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி நிலம் முறைகேடாக விற்பனை
“மகளிருக்கு விரைவில் ரூ.2,500 உரிமைத் தொகை” – அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்