புதுடெல்லி: ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டிய இந்தியர்களின் எண்ணிக்கை 2025-26-ல் 576 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நேற்று அளித்த பதில் வருமாறு: வருமான வரித் தாக்கல் கணக்குகளின்படி, ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டிய தனிநபர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 4 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2022-23-ல் 301 ஆகவும், 2023-24-ல் 284 ஆகவும், 2024-25-ல் 415 ஆகவும் இருந்து. தற்போது 2025-26-ம் ஆண்டில் 576 ஆக உயர்ந்துள்ளது.
வருமான வரிச் சட்டம் 2025 அல்லது முந்தைய வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் ‘கோடீஸ்வரர்’ என்ற சொல்லுக்கு சட்டப்பூர்வ வரையறை எதுவும் இல்லை. மேலும் 2016 ஏப்ரல் 1 முதல் ‘சொத்து வரிச் சட்டம், 1957’ ரத்து செய்யப்பட்டு விட்டதால், கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய தரவுகளை அரசு பராமரிப்பதில்லை.
சமீபத்திய குடும்ப நுகர்வுச் செலவினக் கணக்கெடுப்பின்படி, கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் இரண்டிலுமே வருமான ஏற்றத் தாழ்வு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கான வேலையின்மை விகிதம் 2022-ல் 3.6 சதவீதமாக இருந்தது. 2025-ல் இது 3.1% ஆக குறைந்துள்ளது. நிதி ஆயோக் தரவுகளின்படி கடந்த பத்தாண்டுகளில் வறுமையும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
முற்போக்கான வருமான வரி நடைமுறை, வேலை வாய்ப்புடன் இணைக்கப்பட்ட வரிச் சலுகைகள், ஸ்டார்ட்-அப்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கான ஆதரவு மற்றும் இருப்பிடம், சுகாதாரம், திறன் மேம்பாடு, கிராமப்புற வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்ட நலத்திட்டங்கள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அரசு ஊக்குவித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
தங்கம் விலை அதிரடி சரிவு: பவுனுக்கு ரூ.1,240 குறைவு
தங்கம் பவுனுக்கு ரூ.560 உயர்வு: வெள்ளி விலையில் மாற்றமில்லை
தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா? இன்றைய நிலவரம் என்ன?