July 24, 2026

நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்தது சிஜேபி – பேச்சுவார்த்தைக்கு மத்திய அமைச்சர் மீண்டும் அழைப்பு

புதுடெல்லி: சிஜேபி போராட்​டக் குழு​வினருடன் பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய அரசு தயா​ராக உள்​ளது என்று மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் தெரி​வித்​துள்​ளார். இதற்​கிடையே இன்று நாடு தழுவிய போராட்​டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்​துள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்தி கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. டெல்லி ஜந்​தர் மந்​தரில் நேற்று 34-வது நாளாக சிஜேபி போராட்​டம் நீடித்​தது. இதில் ஆயிரக்​கணக்​கானோர் பங்கேற்றனர். சிஜேபி நிர்​வாகி​கள் பேச்​சு​வார்த்​தைக்கு வரு​மாறு மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி. நட்டா நேற்று மீண்​டும் அழைப்பு விடுத்​தார்.

இதுகுறித்து சிஜேபி செய்​தித் தொடர்​பாளர் கவுரவ் தாஸ், ஜந்​தர் மந்​தரில் கூறும்​போது, “யாருடைய வீட்​டுக்​கும், அலு​வல​கத்​துக்​கும் நாங்​கள் செல்ல மாட்​டோம். எங்​களோடு பேச்​சு​வார்த்தை நடத்த விரும்​பி​னால் ஜந்​தர் மந்​தருக்கு வரலாம் அல்​லது பொது​வான ஓரிடத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்​தலாம்” என்றார்.

இதுகுறித்து மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் கூறிய​தாவது: “போராட்​டக் குழு​வினருடன் பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய அரசு தயா​ராக உள்​ளது. அமைச்​சர் ஜே.பி.நட்​டா​வின் வீடு, அலு​வல​கம் திறந்தே இருக்​கிறது. சிஜேபி போராட்ட குழு​வினர் எப்​போது வேண்​டு​மா​னாலும் வரலாம். போராட்​டக் குழு​வினர் விரும்​பும் இடத்​தில், விரும்​பும் நேரத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்​த​வும் நாங்கள் தயா​ராக உள்​ளோம். மத்​திய அரசின் அழைப்பை போராட்​டக் குழு​வினர் ஏற்க வேண்​டும்.” இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

டெல்​லி​யில் போராட்​டக்​காரர்​களை தடுக்​கும் வகை​யில் 16 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் ஏற்​கெனவே மூடப்​பட்​டுள்​ளன. நேற்று ஜன்​டே​வாலன் மெட்ரோ ரயில் நிலை​ய​மும் மூடப்பட்டதையடுத்து இது​வரை 17 மெட்ரோ நிலை​யங்​கள் மூடப்பட்​டுள்​ளன. டெல்லி மட்​டுமன்றி மும்​பை, கொல்​கத்​தா, நாசிக், சண்​டிகர், சூரத் உள்​ளிட்ட பல்​வேறு நகரங்​களில் நேற்று போராட்​டங்​கள் நடை​பெற்​றன.

கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) செய்​தித் தொடர்​பாளர் அசுதோஷ் ரன்கா டெல்​லி​யில் நேற்று கூறிய​தாவது: “மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி நீக்​கம் செய்​யப்​படும் வரை எங்​களது போராட்​டம் தொடரும். எங்​களது கோரிக்கைகளுக்கு பிரதமர் நரேந்​திர மோடி செவி​சாய்க்க கோருகிறோம். சிஜேபி சார்​பில் வெள்​ளிக்​கிழமை நாடு தழு​விய போராட்​டத்​துக்கு அழைப்பு விடுக்​கிறோம்.

இதன்​படி நாடு முழு​வதும் ஒவ்​வொரு நகரம், கிராமத்​தி​லும் அமைதி​யான முறை​யில் போராட்​டம் நடத்த வேண்​டு​கிறோம். மாணவர் அமைப்​பு​கள் மற்​றும் இதர அமைப்​பு​கள் தங்​களது ஊரில் உரிய அனு​மதி பெற்று போராட்​டம் நடத்த வேண்​டும்.” இவ்வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

காங்கிரஸ் மீது வாங்சுக் மனைவி புகார்– சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கூறியதாவது: “மாணவர்களின் போராட்டத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட சில கட்சிகள் முயற்சி செய்கின்றன. குறிப்பாக கடந்த 21-ம் தேதி பிரதமரின் வீட்டின் முன்பு காங்கிரஸ் நடத்திய போராட்டம் உள்நோக்கம் கொண்டது. மாணவர்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகின்றனர்.

காங்கிரஸ் தலைவர்கள் அவர்களோடு இணைந்து போராட்டத்தில் பங்கேற்காமல் சுயலாபத்துக்காக பிரதமர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். எனது கணவர் சோனம் வாங்சுக்கின் செல்வாக்கு மூலம் ஆதாயம் அடையவும் சில கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன.” இவ்வாறு கீதாஞ்சலி தெரிவித்தார்.

Spread the love