நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, புதுப்பேட்டை, வெலக்கல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்டோர் அந்த கல்லூரியில் படித்து வருகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்கள் வேலைக்கு பேருந்து மூலம் செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய அரசுப் பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் மற்றும் மாணவர்கள் தனியார் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
இதையடுத்து நேற்று மாலை நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டையில் வழியே சென்ற தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏறியுள்ளனர். பேருந்தின் உட்பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் முன் மற்றும் பின் வாசபடிகளில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
பேருந்து வேகமாகச் செல்லும் போதும் வளைவுகளில் திரும்பும் போதும் மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. படியில் நின்று கொண்டு பயணம் செய்வதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் விபத்து நேரிடும் என அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பள்ளி மற்றும் கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் வேலை நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் படியில் பயணம் செய்வதைத் தடுக்க தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மீது காவல் துறையினரும் மோட்டார் வாகன ஆய்வாளர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More Stories
டெல்லி எஜமானர்களைப் பகைக்க அஞ்சும் ‘சோபா மாடல்’ முதல்வர்: மேகதாது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி நிலம் முறைகேடாக விற்பனை
“மகளிருக்கு விரைவில் ரூ.2,500 உரிமைத் தொகை” – அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்