July 29, 2026

சென்னிமலை அருகே நடைபெற்று வந்த கீழ்பவானி வாய்க்கால் குறுக்கே பாலம் விரிவாக்க பணி திடீர் நிறுத்தம்

சென்னிமலை : சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே பாலம் விரிவாக்க பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் கீழ்பவானி வாய்க்காலில் உயிர் தண்ணீர் விடுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருந்துறையில் இருந்து சென்னிமலை அருகே அத்திக்காடு வரை குறிப்பிட்ட இடங்களில் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

இதற்காக பல இடங்களில் பாலங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தது. அதேபோல் சென்னிமலை அருகே காங்கயம் ரோட்டில் தோப்புக்காடு என்ற இடத்தில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டில் கட்டப்பட்டிருந்த 25 அடி அகலம் உள்ள பாலத்தை 4 வழிச்சாலைக்காக பாலத்தின் இருபுறமும் கூடுதலாக 5 அடிகள் அகலப்படுத்துவதற்கான பணிகள் கடந்த ஜூன் மாதம் தொடங்கபட்டது.

அப்போது நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் அதற்கு முன்பாகவே இந்த பாலம் அகலப்படுத்தும் பணி நிறைவடையும்’’ என்றனர். ஆனால், 4 வழிச்சாலை பணிகள் மட்டுமின்றி பெருந்துறை-சென்னிமலை- காங்கயம் சாலையில் கட்டப்படும் அனைத்து பாலங்களின் பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தோப்புக்காடு பகுதியில் நடைபெற்று வந்த பாலம் அகலப்படுத்தும் பணியையும் பாதியில் நிறுத்தி விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து சென்னிமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘நீர்வளத்துறைக்கு சொந்தமான கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வந்த பாலம் விரிவாக்க பணியை பாதியில் விட்டுவிட்டு சென்று விட்டனர்.

இந்த பணிகளை முழுமையாக செய்து முடிக்கும் வரை கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்புகள் இல்லை. பவானிசாகர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக குறைந்த நிலையில், கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக 15 நாட்களாவது உயிர் நீர் விட வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், பாலம் விரிவாக்க பணி பாதியில் நிற்பதால் இதனை காரணம் காட்டி பவானிசாகர் அணையில் இருந்து எங்கள் பகுதிக்கு உயிர் நீர் திறக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வாய்க்காலுக்குள் அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களில் வெடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க பணிகள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்காவது காலை, மாலையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

ஆனால், தூண்களை அமைத்த நாளிலிருந்து இதுவரை தண்ணீர் ஊற்றாததால் அந்த தூண்களில் வெடிப்புகள் ஏற்பட்டு விரைவில் பழுதாகும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, உடனடியாக இந்த பாலம் விரிவுபடுத்தும் பணியை விரைவில் செய்து முடிக்க நீர்வளத்துறையினரும், நெடுஞ்சாலைத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Spread the love