திருக்கோவிலூரில் திமுக வேட்பாளர் கவுதமசிகாம ணியை ஆதரித்து திருவெண்ணெய்நல்லூரில் பிரச்சாரம் செய்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
விழுப்புரம்: திருக்கோவிலூர் தொகுதி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணியை ஆதரித்து, திருவெண்ணெய் நல்லூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: திருக்கோவிலூர் தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
திருவெண்ணெய்நல்லூர் மற்றும் திருக்கோவிலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வந்தவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அப்போதைய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி என்பதை யாரும் மறுக்க முடியாது.
மாணவர்களின் உயர்கல்விக்கு பெரியளவில் உதவி செய்துள்ளனர். ஓரே சட்டப்பேரவை தொகுதிக்கு இரு அரசு கல்லூரியை கொண்டு வந்த பெருமை பொன்முடியைச் சாரும். இந்த வரலாறு தொடர கவுதமசிகாமணிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இவரது வெற்றி, தேமுதிகவின் வெற்றி, விஜயகாந்துக்கு தரப்போகும் வெற்றி என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
இது விவசாயம் சார்ந்த பூமி. ஒரு குவிண்டால் நெல் ரூ.4,500-ம், ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். 23 கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி உறுதி. தமிழகத்தில் 2-வது முறை முதல்வராக ஸ்டாலின், 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்.
அப்போது ரூ.8 ஆயிரம் மதிப்பில் கூப்பன், மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் உட்பட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.ஆயிரம் கைகளை கொண்டு மறைத்தாலும் ஆதவனை மறைக்க முடியாது. நான், இன்று (நேற்று) தேமுதிகவுக்கு பிரச்சாரம் செய்யவில்லை.
7 தொகுதிகளில் உதயசூரியனுக்காக பிரச்சாரம் செய்கிறேன். திருக்கோவிலூர் திமுக வேட்பாளர் கவுதமசிகாமணிக்கு தொடங்கி, பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி என எல்லாமே உதயசூரியன்தான். அதனால் நான், உதயசூரியனாகவே மாறிவிட்டேன்.
கூட்டணித் தர்மத்தை மதிப்பது குறித்து நமக்கு சொல்லிக் கொடுத்தவர் விஜயகாந்த்; வழி நடத்துபவர்கள் தேமுதிக வீரர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

More Stories
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க மத்திய அரசு இலக்கு
கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்