April 10, 2026

நாமக்கல் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில், வரும், 23ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. உள்ள, 6 தொகுதிகளிலும், 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, நாமக்கல் மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், குடிநீர் கேன்கள் மற்றும் கேன்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி தலைமை வகித்து, ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ‘மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் கேன்களின் நிறுவனங்களின் மூலம், பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் கேன்களில், தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

பின்னர், ஓட்டல்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் பில்களில் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல, தேர்தல் நாள் ஏப்., 23 ஆகிய வாசகங்கள் அடங்கிய முத்திரைகளை அச்சிட்டு வழங்கும் வகையில், ஓட்டல் மற்றும் மளிகை கடை உரிமையாளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு முத்திரைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன், வணிகர் சங்க பிரதிநிதிகள், ஓட்டல் உரியமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Spread the love