February 17, 2026

நெதர்லாந்தின் விசித்திர கோரிக்கை: குஜராத் கேப்டன் ‘நெட்’ பயிற்சிக்கு அழைப்பு!

நெதர்லாந்தின் விசித்திர கோரிக்கை: குஜராத் கேப்டன் ‘நெட்’ பயிற்சிக்கு அழைப்பு!

பயணிக்கும் அணிகள் அதன் உள்நாட்டு கிரிக்கெட் ஆடும் பவுலர்களை வலைப்பயிற்சிக்கு அழைத்து தங்கள் பேட்டர்களுக்கு பயிற்சி அளிப்பதைப் பார்த்திருக்கிறோம், இது வழக்கமானதே. ஆனால் நெதர்லாந்து வழக்கத்திற்கு மாறாக குஜராத் கிரிக்கெட் அணியின் கேப்டனை ‘நெட் பேட்டர்’ ஆக அழைத்து விசித்திர கோரிக்கை வைத்துள்ளது.

திங்களன்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தை அணுகிய நெதர்லாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம் நெட் பேட்டர், அதுவும் இடது கை பேட்டர் தேவை.. அனுப்ப முடியுமா? என்ற கோரிக்கையை முன்வைத்தது. காரணம் நெதர்லாந்து அணி இடது கை பேட்டர்கள் நிரம்பிய இந்திய அதிரடி அணியை நாளை உலகக்கோப்பை லீக் போட்டியில் எதிர்கொள்வதே.

இந்திய அணியில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் என்று இடது கை படை உள்ளது, இவர்களுக்கு எப்படி வீசலாம் என்ற உத்திகளை வகுக்க குஜராத் கேப்டனும் இடது கை பேட்டருமான மனன் ஹிங்க்ராஜியாவை நெட் பேட்டராக பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ செய்திகளின் படி, குஜராத் காலேஜ் கிரவுண்டில் பயிற்சி அமர்வில் இருந்த 27 வயது ஹிங்க்ரேஜியாவுக்கு திடீரென அழைப்பு வந்தது. மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி ஸ்டேடியத்துக்கு வருமாறு அழைப்பு வந்ததும் ஹிங்க்ராஜியா குழம்பித்தான் போனார்.

அடித்துப் பிடித்து ஸ்டேடியத்திற்கு வந்த ஹிங்க்ராஜியாவை நெதர்லாந்து பயிற்சியாளர் ரியான் குக் வரவேற்றார். நெதர்லாந்து பவுலர்களுக்கு எதிராக பேட் செய்யுமாறு அவர் கூறினார். மைதானத்தின் பயிற்சி பிட்சில் ஹிங்ராஜியா தனது ஃபுல் ரேஞ்ச் ஷாட்களை காட்டி பந்துகளைப் பறக்க விட்டார்.

சுமார் 2 மணி நேரம் இடைவெளியின்றி நெதர்லாந்தின் பவுலர்கள் இவருக்கு வீசினர். இவரும் முழு திருப்தியுடன் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றினார். ஆனால் இது கிரிக்கெட்டிற்குப் புதிதுதான், நெட் பவுலருக்குப் பதில் நெட் பேட்டரை அழைத்தது.

Spread the love