August 1, 2026

நெல்லையை தாக்கும் பருவமழை… குற்றாலத்தில் காட்டாற்று வெள்ள அபாயம்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (ஜூலை 31) மற்றும் நாளை (ஆகஸ்ட் 1) பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அம்பாசமுத்திரம், நாங்குநேரி, தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், உத்தமபாளையம் மற்றும் வால்பாறை உள்ளிட்ட ஏழு தாலுகாக்களில் பல இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் கோதையாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மலைப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட தென் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று மற்றும் நாளை தென் மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் என்றும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடித்தால் அணைகளின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரை மற்றும் நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Spread the love