புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலின் ஓராண்டுக்குப் பிறகும் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டின் இதே நாளில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயணங்கரவாதிகள் இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த நாட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்திய அரசு எடுத்தது. இதில், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டை முன்னிட்டு தலைவர்கள் பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “ஓராண்டுக்குப் பிறகும், பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஜம்மு-காஷ்மீரை துன்பங்களிலிருந்தும் அப்பாவி மரணங்களிலிருந்தும் விடுவிப்பதற்கான நமது விருப்பத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம். அது மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்தையும் செய்ய நாம் உறுதியுடன் இருக்கிறோம். ஓராண்டுக்கு முன்பு அந்தக் கோழைத்தனமான தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் நாங்கள் என்றும் ஒற்றுமையாக இருக்கிறோம். அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும்” என தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், “2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் தங்கள் உயிரை இழந்த அப்பாவி மக்களை நினைவுகூர்ந்து, அவர்களுக்கு என் மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
அவர்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் குடும்பத்தினரின் நீடித்த துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம். நமது தேசத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட அந்தக் காயங்களை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம்.
இந்தியா பல பத்தாண்டுகளாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை சகித்து வந்துள்ளது. ஆனால் இன்று நமது பதில் உறுதியானதாகவும், தீர்க்கமானதாகவும், அசைக்க முடியாததாகவும் உள்ளது. நமது மக்களுக்குத் தீங்கு விளைவிக்கவோ அல்லது நமது ஒற்றுமையைக் குலைக்கவோ செய்யப்படும் எந்தவொரு முயற்சியும் வலிமையுடனும் தெளிவுடனும் எதிர்கொள்ளப்படும் என்பதை நமது உறுதியான நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஆண்டு நடந்த கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இழந்த அப்பாவி உயிர்களை இந்த நாளில் நாம் நினைவுகூர்கிறோம். நமது மக்கள் அடைந்த துயரமும் வலியும் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் இன்னமும் உள்ளது. பயங்கரவாதம் என்பது மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி, அதை எதிர்த்துப் போராடித் தோற்கடிக்க நாம் ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதத்துக்கும் அதற்குத் துணை நிற்பவர்களுக்கும் எதிரான சகிப்புத்தன்மையற்ற கொள்கையை இந்தியா தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

More Stories
திருச்சூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 13 பேர் உயிரிழப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: 2% அகவிலைப்படி உயர்வு- அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!
“சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு