August 24, 2026

“பரந்தூர் விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவது தமிழக வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளிவிடும்” – மு.க.ஸ்டாலின்

சென்னை: “பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு, மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி இது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதல்வர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழகத்தின் நலனை அடகு வைக்கக் கூடாது.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.

மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழகத்தின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம். சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழகத்தின் வளர்ச்சியே மொத்தமாக டிராப் ஆகிவிடும்.

முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழகத்தை கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதல்வரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட். தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை.

எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் தவெக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் அறிவிப்பு என்ன?

“ஏகனாபுரம் மற்றும் அதையொட்டி அமைந்துள்ள கிராம மக்களின் போராட்டத்தை அறிந்து கடந்த 20.01.2025-ல் அங்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். அப்போது சில அறிவிப்புகளை நான் வெளியிட்டேன். சென்னை பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய உள்ள விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்தத் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024-ல் நடைபெற்ற மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். தொழில் வளர்ச்சி மற்றும் அதற்கான விமான நிலையங்களின் பங்கு குறித்து நான் நன்கு அறிவேன். அதற்கான எனது முழு ஆதரவு உண்டு. ஆனால், பரந்தூரில் இந்த விமான நிலைய திட்டம் அமைய கூடாது. அது குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று அறிவித்தேன்.

குறைவான விவசாய நிலையங்கள் பாதிக்கப்படும் வகையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தேன்.

மக்களிடம் அன்று அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு, புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களிடமும் விரிவாக ஆலோசனை நடத்தினேன். ஏற்கெனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்.

துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் உடன் கலந்துரையாடி விவசாய நிலம் மற்றும் குடியிருப்புகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்த இடங்களில் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார்.

தங்கம் தென்னரசு ரியாக்‌ஷன்:

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் பரந்தூர் விமான நிலையத்தின் அவசியத் தேவைகள், அதன் முக்கியத்துவம், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் இன்று உரையாற்ற இருந்தோம். ஆனால், முதல்வர் விஜய் 110 விதியின் கீழ் பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டு, அதில் பேசுவதற்கு ஏதும் இல்லை என தெரிவித்துவிட்டனர்.

இந்த விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் அவசியம் குறித்த விஷயங்களை பேசவிருந்த எதிர்க்கட்சிகளின் குரலை திட்டமிட்டு நிராகரித்து, 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 110 விதியின் கீழ் விவாதிக்கவில்லை என்றாலும், கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவும் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

பரந்தூரில் அமையவுள்ள இந்த விமான நிலையம் தமிழகத்தின் பொருளாதார, தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று. சென்னையில் தற்போது உள்ள விமான நிலையம் 2008-ம் ஆண்டில் விமானப்பயணிகள் எண்ணிக்கையில் நாட்டில் மூன்றாவது இடத்தில் இருந்தது. அப்போது பெங்களூரு 5 வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது பெங்களூரு விமான நிலையம் 3-ம் இடத்துக்கு வந்துவிட்டது, சென்னை விமான நிலையம் 5-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சரக்குகளைக் கையாளும் திறனில் ஐந்தரை லட்சம் டன் கையாளும் வகையில் பெங்களூரு விமான நிலையம் முன்னேறியுள்ளது. இந்தச் சூழலில் தான், சென்னையில் கிரீன் ஃபீல்டு விமான நிலையம் வர வேண்டும் என்று பரந்தூர் திட்டம் கொண்டுவரப்பட்டது. பரந்தூர் விமானநிலையம் வரும் என்ற நம்பிக்கையில் தான் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் எண்ணற்ற தொழிற்சாலைகள் வந்துள்ளன.

பரந்தூர் விமான நிலையத்தை தேர்ந்தெடுக்கும் முன்பு சென்னையின் பல இடங்களை ஆய்வு செய்தோம். சென்னையின் புவியியல் அமைப்பின் படி மேற்குப் பகுதியில் விமான நிலையம் அமைவதே பொருத்தமாக இருக்கும், குறைவான மக்களே அங்கு பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் பரந்தூரை தேர்வு செய்தோம். இப்போது பரந்தூர் திட்டத்தை கைவிடுவதாக கொள்கை முடிவெடுப்பதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த திட்டம் ரத்து செய்யப்படுவதால் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில்வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையத்துக்காக 90 சதவீத இடங்களை கையகப்படுத்தியுள்ளோம். இப்போது அந்தத் திட்டத்தை கைவிட்டுவிட்டால், அந்த இடங்களை என்ன செய்யப் போகிறீர்கள். அந்த இடத்துக்கான இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால், அந்த நிலத்தை என்ன செய்வீர்கள். பரந்தூருக்கு பதிலாக வேறு எங்கே இடம் தேர்வு செய்வீர்கள். அந்த இடத்தில் சூழலியல், விவசாயிகள் பிரச்சினைகள் ஏற்படாதா?

பரந்தூர் விமான நிலையம் வரும் என்ற எதிர்பார்ப்பில் தொடங்கப்பட்ட மெட்ரோ திட்டம் என்னவாகும். பரந்தூரில் இந்த விமான நிலையத்தை அமைப்பதுதான் சரியாக இருக்கும். அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டம் நிறுத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்துக்காக இந்த திட்டத்தை ரத்து செய்வது பொருளாதார வளர்ச்சியை தடுக்கும்.

இப்போது பல தொழில்கள் ஆந்திராவை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே ஓசூர் விமான நிலையத்தை இழந்துவிட்டோம். ஆந்திராவின் குப்பத்தில் புதிய விமான நிலையம் வருகிறது. மீண்டும் பரந்தூர் திட்டத்தையும் இழந்தால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி எங்கே போகும். தவெக அரசு சொல்லியுள்ள 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எப்படி அடைய முடியும்?” என்றார்.

Spread the love