April 23, 2026

பிளஸ் 2 முடிவுகள் எப்போது? – கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2015-26 கல்வி ஆண்டிற்கான 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 27-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வுகளை எழுத மாநிலம் முழுவதும் சுமார் 7,99,692 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளைத் தேர்வுத் துறை உடனடியாகத் தொடங்கியது.

முதலில் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே, அதாவது மார்ச் 6-ஆம் தேதியன்றே 89 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் இப்பணிகள் அனைத்தையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால், திட்டமிட்ட தேதியை விட முன்னதாகவே முடிவுகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்துப் பேசிய கல்வித் துறை அதிகாரி ஒருவர், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மே மாதம் 8-ஆம் தேதி வெளியிடப் பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல், 11-ஆம் வகுப்பு அரியர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் மே 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 4-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக 12-ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிடுவது குறித்துத் தேர்வுத் துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், தற்போதைய நிலவரப்படி மே 8-ஆம் தேதியே முடிவுகள் வெளியிடப்படும் என்றும், இதில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் கல்வித் துறை சார்பில் முறையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப்பயன்படுத்தி tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாகத் தங்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

Spread the love