புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்தார். வரும் 13-ம் தேதி முதல்வராக அவர் பதவியேற்கிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக, லஜக முறையே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளன.
புதுச்சேரியில் உள்ள 30 எம்எல்ஏக்களில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதேநேரம் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18 எம்எல்ஏக்கள் பலம் உள்ளதால் மீண்டும் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.
ஏற்கெனவே கடந்த 3 நாட்களுக்கு முன் என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சித்தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே போல் பாஜகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
என்டிஏ கூட்டணி அமைச்சரவையில் பாஜவுக்கு எத்தனை அமைச்சர்கள் என்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத்தொடர்ந்து, புதிய ஆட்சி அமைய முதல்வர் பதவியை ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்து, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் நேற்று முன்தினம் கடிதம் அளித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா, ரங்கசாமி, பேரவையின் பாஜக தலைவர் நமச்சிவாயம், அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் என்டிஏ கூட்டணி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ரங்கசாமி ஆட்சி அமைக்க பாஜக, அதிமுக, லஜக கட்சிகள் ஆதரவுக் கடிதங்களை வழங்கின. கூட்டத்துக்கு பின் ரங்கசாமி கூறும்போது, “ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்திக்கவுள்ளேன்.
அதன்பிறகு பதவியேற்பு விழா தேதி பற்றி முடிவு செய்யப்படும். அமைச்சர்கள் பதவி யார் யாருக்கு, எந்தக் கட்சியினருக்கு என்பது பதவி தரும்போது தெரியும். பேரவைத் தலைவர் யார் என்பதையும் பிறகு தெரிவிக்கிறேன்” என்றார்.
என்டிஏ எம்எல்ஏக்கள் தரப்பில் விசாரித்தபோது, “வரும் 13-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் முதல்வர் ரங்கசாமி பதவியேற்க முடிவு எடுத்துள்ளார்” என்று தெரிவித்தனர். இதுதொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.
பாஜக அழுத்தம்
மேலும் கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் ரங்கசாமியும் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த முறையை போல பேரவைத் தலைவர், இரு அமைச்சர்கள் பதவிகளை தங்களுக்கு வழங்கும்படி பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உரிமைக்கோரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் முதல்வர் ரங்கசாமி கடிதம் அளித்தார். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக, லஜக எம்எல்ஏக்கள் அப்போது உடனிருந்தனர்.
இச்சந்திப்புக்கு பிறகு முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “புதுச்சேரியில் என்டிஏ ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளேன். வரும் 13-ம் தேதி காலை முதல்வராக பதவி ஏற்கிறேன்” என்றார்.
தொடர்ந்து பாஜக மாநிலத்தலைவர் வி.பி.ராமலிங்கம் கூறுகையில்,“ஏற்கெனவே கடந்த என்டிஏ கூட்டணியில் இருந்தது போல் புதிதாக அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பாஜகவுக்கு பேரவைத்தலைவர், இரு அமைச்சர்கள் தர கோரியிருந்தோம்.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது” என்றார்.
இதைத் தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்தார்.
அப்போது புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்தார். கடிதம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

More Stories
ட்ரம்ப் விதித்த 10% இறக்குமதி வரி செல்லாது: அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு
மே. வ தேர்தல் :உச்ச நீதிமன்றத்தை நாடும்திரிணாமுல் காங்கிரஸ் ?
மிழக ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்..