வாஷிங்டன்: உலக நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடுதல் வரி செல்லாது என்று அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் பெரும்பாலான இறக்குமதிப் பொருட்களுக்கு 10 சதவீத வரியை விதித்தது. இதை எதிர்த்து 24 மாகாணங்களும், சில தனியார் நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2-1 என்ற கணக்கில் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக 53 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளதாவது: 1974-ம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 122-வது பிரிவைப் பயன்படுத்தி இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தகக் கொடுப்பனவு நிலையில் (பேலன்ஸ் ஆப் பேமண்ட்) பெரும் பற்றாக்குறை நிலவும் போது மட்டுமே, 150 நாட்களுக்கு இத்தகைய வரியை விதிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு. ஆனால், ட்ரம்ப் நிர்வாகம் வர்த்தகப் பற்றாக்குறையை மட்டுமே காரணமாகக் காட்டி இந்த வரி விதிப்பை செயல்படுத்தியுள்ளது.
இது சட்டப்படி செல்லாது. இந்த வரி விதிப்பால் மனுதாரர்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வழக்கு தொடர்ந்த மாகாணம் மற்றும் இரு நிறுவனங்களிடம் வசூலிக்கப்பட்ட வரியை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.
ட்ரம்ப் விமர்சனம்
இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் கூறும்போது, ‘‘நீதிமன்றங்களின் இத்தகைய தீர்ப்புகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள். ஒரு வழியில் தடை ஏற்பட்டால், நாங்கள் மாற்று வழியில் வரி விதிப்பு முறையைச் செயல்படுத்துவோம்’’ என்றார்.

More Stories
ரூ.634 கோடி லஞ்ச முறைகேடு வழக்கு: கே.என். நேரு மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவு -சிக்கலில் திமுக
வாகனப் பதிவில் சிறப்பு எண் பெற கட்டணத்தை உயர்த்த முடிவு: வரைவு அறிக்கை வெளியிட்டது தமிழக அரசு
போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஏஐடியுசி வலியுறுத்தல்