பெரம்பலூர் : திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு ஐந்தரை அடி அகலத்தில், 7 அடி உயரத்தில் ஊஞ்சல் பெரம்பலூர் அருகே அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் தயாராகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திவ்ய தேசங்களில் முதன்மையானது ஆகும். காவிரி- கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள தீவு நகரில் அமைந்துள்ளது.
திருச்சி உறையூரில் அமைந்துள்ள கமலவல்லி நாச்சியார் கோயில் உள்ளது. இது 108 வைணவத்தலங்களில் சோழநாட்டு 2வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்தில் தாயார் கமலவல்லி பெருமாளை விட முதன்மையாக கருதப்படுகிறார்.
பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தனி முக்கியத்துவம் தரப்படுவது போல, இத்தலத்தில் தாயாரே பிரதானமாக வழிபடப்படுகிறார். தாயார் ஸ்ரீரங்கத்தை நோக்கி வடக்கு பார்த்தவாறு காட்சி தருகிறார். நந்தசோழ மன்னரின் மகளாக அவதரித்த மகாலட்சுமி ஸ்ரீரங்க நாதரை மணந்த தலம் இது.
புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு நாச்சியாருக்கான ஊஞ்சல் செய்யும் பணி, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசின் புவிசார் குறியீடு பெற்ற உலக புகழ்பெற்ற அரும்பாவூர் மரச்சிற்பக் கூடத்தில் இருந்து பர்மா தேக்கு மரத்தால் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. உறையூர் நாச்சியார் கோயிலுக்கு ஊஞ்சல் அமைக்கும் பணி ஐந்தரை அடி அகலத்தில், 7 அடி உயரத்தில், 90 சிற்பங்களுடன் தயாராகி வருகிறது.
அதில் குறிப்பாக தசாவதார சிற்பங்கள், அஷ்டலட்சுமி, ரெங்கநாதர், யாழி, யானை, ஊஞ்சல் கிருஷ்ணர், கந்தர்வர்கள், ராமர் பட்டாபிஷேகம் 90 சிற்பங்கள் 6 இன்ச் முதல் 11 இன்ச் உயரம் வரை வடிவமைக்கப்பட்டு ஊஞ்சலின் பக்க சுவர் பகுதிகளில் பதிக்கப்பட உள்ளன.
இதற்காக புகழ்பெற்ற சிற்பி மகேந்திரன் தலைமையில் சிற்பிகள் கொளஞ்சிநாதன், முருகானந்தம் மற்றும் (தச்சு வேலை) கொளஞ்சி என்கிற ஜெயச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிற்பங்கள் செதுக்கும் பணிகள் 100சதவீதம் முழுமை பெற்ற பின்னர் அவற்றிற்கு வண்ணம் திட்டி, ஊஞ்சலாக இணைக்கும் பணிகள் நடைபெற்ற பிறகு செப்டம்பர் மாதத்தில் உறையூர் நாச்சியார் கோயிலில் ஒப்படைக்கப்பட உள்ளது.தேக்கு மரங்களில் தெய்வங்களையும், தெய்வங்களுக்கான ஊஞ்சல்களையும், திருத்தேர்களையும் தங்கள் கைவண்ணத்தில் உருவாக்கி வரும் அரும்பாவூர் மரச் சிற்பிகளால் அரும்பாவூர் பேரூராட்சியும், பெரம்பலூர் மாவட்டமும் பெருமை கொள்கிறது.

More Stories
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு முதல்வர் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு
“இலாகா அனுமதி தருவதில் காலதாமதம் ஏன் என்று எனக்கே தெரியவில்லை” – முதல்வர் ரங்கசாமி
சிவ சேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து