சென்னை: ‘அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பேச்சு சுதந்திரத்துக்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா கோட்டூர்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 39 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் சிறந்த மாணவர் விருது டி.அன்புதாசன் மற்றும் வி.ஆரத்தி ஆகியோருக்கும், திறன் மேம்பாட்டு விருது மாணவர் பி.சுரேந்தருக்கும் அளிக்கப்பட்டது.
விழாவில் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைவர் ‘இந்து’ என்.ரவி பேசியதாவது: தற்போதைய தமிழக அரசில் முதல்வர் விஜய் உட்பட பலருக்கும் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு பற்றி நன்றாகத் தெரியும். எனவே, ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்துக்கான சிறந்த சூழலை உருவாக்கு வதற்கு இதுவே சரியான தருணமாகும்.
விமர்சனங்கள் எவ்வளவு கடுமையாக அல்லது நியாயமற்றதாக இருந்தாலும், அதை சகித்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை இருக்க வேண்டும். மேலும், பேச்சு சுதந்திரம் குறித்த எந்தவொரு நடவடிக்கையும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும்.
சமூக ஊடகங்களின் வளர்ச்சியால், செய்திகளை யார் வேண்டுமானாலும் எளிதாகப் பகிரலாம் என்ற நிலை வந்துவிட்டது. ஆனால், சரியான பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் உண்மையான செய்திகள், நேர்மை மற்றும் நல்ல கருத்துகள் குறைந்துவிட்டன.
இந்த காலகட்டத்தில் நாளிதழ், தொலைக்காட்சி முதல் சமூக வலைதளங்கள் வரை ஊடகங்கள் பெருகிவிட்டன. இதனால்தான் சென்னை இதழியல் நிறுவனம் போன்ற அமைப்புகள் வழங்கும் பயிற்சி மிகவும் முக்கியமானதாக இருக்கப் போகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: சென்னை இதழியல் கல்வி நிறுவனம் முந்தைய அரசால் உருவாக்கப்பட்டது. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற கடந்த அரசின் அனைத்து நல்ல பணிகளையும் இந்த அரசு தொடரும். ஊடகங்கள் ஏதோ ஒரு கட்சி அல்லது கொள்கைக்காக இல்லை; மக்களுக்காக என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பேச்சு சுதந்திரத்துக்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும், இந்த அரசு மக்கள் நலனுக்காகவே செயல்படும். மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் ஒற்றுமையாகவே நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அருண் தம்புராஜ், சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
ஊழல் ஆதாரங்களை அழிக்க மின்வாரிய தலைமை அலுவலக ஹார்டு டிஸ்குகள் திருட்டா? – விசாரணை கோரும் அன்புமணி
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்” – முதல்வர் விஜய் வாழ்த்து