காந்திநகர்: நிதி ஆயோக் முதன்முறையாக வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டிற்கான முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் குறியீட்டுப் பட்டியலில் குஜராத் மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் 3-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன.
முதலீட்டுக்கு உகந்த சூழல் குறித்து நாட்டின் 17 முக்கிய மாநிலங்களில் விரிவாக ஆய்வு நடத்தப்பட்டது. இதில் குஜராத் மாநிலம் 56.6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா (53.7 புள்ளிகள்) இரண்டாம் இடத்தையும், தமிழகம் (53.3 புள்ளிகள்) மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளன.
முதல்வர் பூபேந்திர படேலின் தலைமையின்கீழ், வெளிப்படையான, திறமையான மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த வணிகச் சூழலை உருவாக்குவதில் குஜராத் அரசு கொண்டுள்ள தொடர் அர்ப்பணிப்பை இந்தத் தரவரிசை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் இந்த முதலீட்டு இணக்கக் குறியீடானது, மாநிலங்களின் தொழில் வளர்ச்சிக்கான கொள்கை மற்றும் நிர்வாகம், உள்கட்டமைப்பு வசதிகள், வணிக வசதி, நிதி மேலாண்மை உள்ளிட்ட முதலீட்டுச் சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்தையும் உள்ளடக்கிய 8 முக்கிய தூண்களின்கீழ், 84 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 17 மாநிலங்களையும் மதிப்பீடு செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் கொள்கை ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டாளர்களை மையமாகக் கொண்ட நிர்வாகமே அதன் மிகப்பெரிய பலம் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

More Stories
தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800க்கு விற்பனை!!