முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நாளை (ஜூன் 05) கூடுகிறது.
தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம் நாளை (ஜூன் 5) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் என அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று நடக்கும் முதல் கூட்டத்தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக அரசின் அமைச்சரவை கூட்டம்
புதிய அரசு பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம் என்பதால், இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரை எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய கால அட்டவணை, அதில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அரசின் கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம்.
தவெக பக்கம் சாயும் அதிமுக எம்.எல்.ஏகள்! CVS எடுக்கும் முக்கிய முடிவு?
மேகதாது அணை விவகாரம்
இதனுடன் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் பேசப்பட்டு வரும் மேகதாது அணை விவகாரமும் அமைச்சரவை கூட்டத்தில் இடம் பெறும் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசின் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடைபெறலாம்.அதேபோல் டாஸ்மாக் தொடர்பான கொள்கைகள், மதுபான விற்பனை கட்டுப்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களும் விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்கள் தொடர்பாகவும், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்தும் அமைச்சரவை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குறுதியில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
புதிய அரசு மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால், இந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும் அறிவிப்புகள் மீது பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தி வருகின்றனர்.மொத்தத்தில், புதிய அரசின் செயல்பாட்டுகளை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்த முதல் அமைச்சரவை கூட்டம் பார்க்கப்படுகிறது. கூட்டம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கடந்த அமைச்சரவையில் 35 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால் தனித்து ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தமிழ்நாட்டின் 13-வது முதலமைச்சராக மே 10-ஆம் தேதி பதவியேற்றார். பின்னர் 35 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More Stories
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
ஊழல் ஆதாரங்களை அழிக்க மின்வாரிய தலைமை அலுவலக ஹார்டு டிஸ்குகள் திருட்டா? – விசாரணை கோரும் அன்புமணி
“கல்வி எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி; மகிழ்ச்சியாக கற்றுக் கொள்ளுங்கள்” – முதல்வர் விஜய் வாழ்த்து