சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்தவர்!
சென்னை: தமிழகத்தின் மூத்த கல்வியாளர்களுள் ஒருவரான முனைவர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இரங்கல் குறிப்பில், “மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். இராஜகோபாலன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆசிரியராகத் தமது கல்விப் பணியைத் தொடங்கிய அவர் தமிழ்நாடு அரசு முன்னெடுத்த சமச்சீர்க் கல்விக் குழுவின் உறுப்பினராக இருந்து தமிழ்நாட்டின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியிலும், மாணவர் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டியவர். அன்னாரது மறைவு கல்வித்துறைக்குப் பேரிழப்பாகும்.
அவருக்கு என் அஞ்சலியினைத் செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
‘மருத்துவ ஆய்வுக்காக உடல்’ – சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு (பிப்.3) 11.54 மணிக்கு எஸ்.எஸ்.ராஜகோபாலன் காலமானார்.
அவரது உடல் மருத்துவ ஆய்வுக்கு சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் இன்று ஒப்படைக்கப்படுவதாகத் தகவல்.

More Stories
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு
‘குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை இல்லை’ – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு