செஞ்சூரியனில் நேற்று நடைபெற்ற டி20 போட்டியில் மே.இ.தீவுகளின் 221 ரன்கள் இலக்கை 17.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா ஊதித் தள்ளியது. இதற்கு முக்கியக் காரணம் குவிண்டன் டி காக் 49 பந்துகளில் 6 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 115 ரன்களை விளாசி மே.இ.தீவுகள் பீல்டர்களை மைதானம் நெடுக ஓடவிட்டதே. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் போட்டிக்கு முன் டி காக் தன் சொந்த மட்டைகளை மறந்து விட்டுவிட்டுச் சென்றார்.
இதனையடுத்து அவர் ஆடியது தென் ஆப்பிரிக்காவின் இளம் தலைமுறை அதிரடி வீரரும் சிஎஸ்கே வீரருமான டேவால்ட் பிரேவிஸ் மட்டையைப் பயன்படுத்தி ஆடினார். நேற்றைய தினம் சூப்பர் ஸ்போர்ட் பார்க் நோக்கி அணிப் பேருந்து புறப்பட இன்னும் அரை மணி நேரமே இருந்த நிலையில், தன் பேட்டுகளை கடற்கரை பகுதியில் விட்டுவிட்டு வந்தார் டி காக்.
போட்டி முடிந்த பிறகு இதுகுறித்து பேசிய டி காக், “அதை கவனித்ததும் கொஞ்சம் முட்டாளாக உணர்ந்தேன். கடந்த ஒரு வருடமாக புது கிட்-பேக்குகளைப் பயன்படுத்தி வந்ததால் வந்த வினை அது. திடீரென மறந்து விட்டேன். இதனால், மாற்று ஏற்பாடாக சக வீரரின் பேட்டை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
டிரெஸ்ஸிங் ரூமுக்குள் போகும் முன், டேவால்ட் பிரெவிஸ் மற்றும் ரியான் ரிக்கல்டன் கிட்-பேகுகளில் இருந்த பேட்டுகளை பார்த்தேன். பிரெவிஸின் பேட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டேன். ‘இன்று இதை பயன்படுத்தப் போகிறேன்’ என்று சொன்னேன். அதற்கு பிரெவிஸ், ‘இது இடது கை வீரருக்கான பேட், உங்களுக்கு சரியாக இருக்கும் என்றார் பிரேவிஸ்.
என் பேட்டுகள் அடுத்த போட்டிக்கு முன் வந்துவிட்டால், என் சொந்த பேட்டுகளையே பயன்படுத்துவேன். அந்த பேட் பிரெவிஸுக்கே திரும்பப் போகிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், அதைப் பயன்படுத்த எனக்கு அவ்வளவு வசதியாக இல்லை. அதன் எடை இளம் வீரர்கள் பலமாக ஸ்விங் செய்ய ஏற்றது எனக்கு கொஞ்சம் ஒத்து வரவில்லை.” என்றார் டி காக்.
புதிய பேட்டில் சரளமாக ஆடிய டி காக், ரிக்கிள்டனுடன் சேர்ந்து 162 ரன்களைச் சேர்த்தார். இதனால், பிரெவிஸுக்கு அதிக வேலை இல்லாமல் போனது. நான்காவது இடத்தில் களமிறங்கிய அவர் 4 ரன்களில் அவுட்டானார். பின்னர், ரிக்கல்டன் மற்றும் ஜேசன் ஸ்மித் இணைந்து, சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய வெற்றி விரட்டலை நிறைவு செய்தனர்.

More Stories
சிராஜின் மறக்க முடியாத ‘பவுல்டு’ – ஓவலில் இங்கிலாந்தின் இதயம் நொறுங்கிய இந்திய வெற்றி!
CWG 2026: மூட்டுவலியை வென்று பதக்கம் வென்ற சீமா
பாரா தடகளத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் திலீப் மஹது காவிட்