November 4, 2026

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர்: மேட்டூர் அணையில் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயக்குமாரி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் 3 முறை பருவகால ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனையொட்டி, மேட்டூர் அணை பகுதி முழுவதும் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயக்குமாரி தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அணையின் வலது கரையில் நீர் அளவீட்டு கருவிகள், தானியங்கி அளவீட்டு கருவிகள், மேல்மட்ட மதகு ஆகியவற்றை தலைமை பொறியாளர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். தொடர்ந்து, மேட்டூர் அணை முழுவதும் 1.5 கி.மீ தூரம் அதிகாரிகளுடன் நடந்த சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நில அதிர்வு கருவிகள் உட்பட அணையில் வைக்கப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, மேட்டூர் அணையின் இடது கரையில் 16 கண் பாலத்தில் பாலத்தின் வளைவுகள் வலுப்படுத்தும் பணியை பார்வையிட்ட தலைமை பொறியாளர், 16 கண் மதகுப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சேலம் மேல் காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், நிர்வாகப் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் உதவி பொறியாளர்கள் சதீஷ்குமார், பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 3,777 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை 4,614 கனஅடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 56.38 அடியாகவும், நீர் இருப்பு 22.06 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.

Spread the love