புதுடெல்லி: மேற்கு வங்கம் ஹல்தியாவில் நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா ஆட்சியில் மீன் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. பிஹாரில் மீனவர்களின் நலனுக்காகப் பாஜக பல்வேறு பணிகளை மேற்கொண்டதன் விளைவாக, அங்கு மீன் உற்பத்தி இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இங்கு மீன்களுக்கான தேவை மிக அதிகமாக இருந்த போதிலும், அதற்கான உற்பத்தியைப் பெருக்குவதில் மாநில அரசு முற்றிலும் தோல்வியடைந்து உள்ளது. இதனால் மீன் இறக்குமதி அதிகரித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மீன் விநியோகத்தை அதிகரிக்கவும், மீன் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும் டிஎம்சி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தால், மேற்கு வங்கத்தை மீன்வளம் மற்றும் கடல் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற்றும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இதனிடையே வடக்கு 24 பர்கானாவின் அகர்பாராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பேசுகையில்,”பிரதமர் மோடி வைக்கும் மீன் மீதானக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். பிஹாரில் மீன் உற்பத்தி உண்மையில் அதிகரிக்கவில்லை. மாறாக அங்கு மீனுக்கான தேவை குறைந்துவிட்டதே காரணம். பிஹாரில் உள்ள மக்களை மீன் சாப்பிடவே நீங்கள் அனுமதிப்பதில்லை. ராஜஸ்தான், பிஹார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள மக்களை மீன், முட்டை மற்றும் இறைச்சி சாப்பிட நீங்கள் அனுமதிப்பதில்லை.
அத்தகைய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. வங்காள மக்களுக்கு மீன் சாப்பிடுவது எப்படி என்று நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். பாஜகவினர் உங்களை மீன் சாப்பிட விடமாட்டார்கள். நீங்கள் இறைச்சி சாப்பிட முடியாது, முட்டை சாப்பிட முடியாது, வங்காள மொழியில் பேச முடியாது. மீறிப் பேசினால், உங்களை ‘வங்க தேசத்தவர்’ என்று முத்திரை குத்துவார்கள்” என தெரிவித்தார்.

More Stories
இந்தியத் தேர்தல் திருவிழா: சர்வதேச குழுவினர் பாராட்டு
பிரதமரின் கன்னியாகுமரி வருகைக்கு பிறகு தடயமே இல்லாமல் திமுக மறைந்து போகும்: பாஜக விமர்சனம்
“எனக்கு நிதிஷ் குமார் நிலை ஏற்படாது” – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி