பெங்களூரு/புதுடெல்லி: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்று கொண்டார். இதைத்தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்ய மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று கூடுகிறது. புதிய அமைச்சரவை தொடர்பாக சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் டெல்லிக்கு சென்று மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
கர்நாடக முதல்வராக சித்தராமையா 3 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், காங்கிரஸ் மேலிடம் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தியது.
இதையடுத்து நேற்று முன்தினம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையாவின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், அமைச்சரவையை கலைப்பதாக அறிவித்த ஆளுநர், புதிய முதல்வர் பதவியேற்கும்வரை காபந்து முதல்வராக தொடருமாறு சித்தராமையாவை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் சித்தராமையா தனது மகன் யதீந்திரா உடனும், டி.கே.சிவகுமார் தனது சகோதரர் டி.கே.சுரேஷ் உடனும் நேற்று முன்தினம் இரவு டெல்லிக்கு சென்றனர். அங்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிடத் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேசினர்.
அந்த சந்திப்பில், புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. சித்தராமையா தரப்பில் தனது மகனும் காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திராவுக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு கோரியதாக தெரிகிறது. டி.கே.சிவகுமார் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பெங்களூருவில் சனிக்கிழமை காலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் அடுத்த முதல்வரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். புதிய அமைச்சரவை குறித்து பின்னர் விவாதிக்கப்படும்” என்றார்.
அமைச்சர் பதவி பெறுவதற்காக பிரியங்க் கார்கே, பரமேஷ்வர், பொன்னண்ணா, ரிஸ்வான், ஜமீர் அஹமது, ஹாரீஷ் உட்பட 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மேலிடத் தலைவர்களை சந்தித்து அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் ஜூன் 3-ல் பதவியேற்பு
அசாம் மாநில திரிணமூல் தலைவர் அபிஜித் விலகல்
கேரள சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடப்படாதது குறித்து ஆளுநர் அர்லேகர் அதிருப்தி