July 30, 2026

வறுமையும் வசதியின்மையும் துரத்தினாலும் தடைகளை தாண்டி பாய்ந்த சர்வேஷ் குஷாரே!

விவ​சாயக் கழி​வு​களும் சோளத் தட்​டைகளும் மட்​டுமே குஷன் மெத்​தைகளாக இருந்த ஒரு கிராமத்​துக் களத்​திலிருந்து புறப்பட்டு, இன்று சர்​வ​தேசத் தடகள அரங்​கில் இந்​தி​யா​வின் கொடியை உயரப் பறக்​கச் செய்​திருக்​கிறார் சர்வேஷ் குஷாரே.

ஸ்காட்​லாந்​தின் கிளாஸ்கோ நகரில் நடை​பெற்று வரும் காமன்வெல்த் விளை​யாட்​டில் ஆடவருக்​கான உயரம் தாண்​டு​தல் பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்துள்​ளார் 31 வயதாகும் சர்​வேஷ் குஷாரே.

மகா​ராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்​டத்​தில் உள்ள தேவர்​காவ் என்ற சிறிய கிராமத்​தைச் சேர்ந்​தவர் சர்​வேஷ் குஷாரே. இவரது தந்தை வெங்​காய விவ​சா​யி. விளை​யாட்​டுத் துறை​யில் முறையான வசதி​களோ, சர்​வ​தேசத் தரம் வாய்ந்த பயிற்​சிக் களங்​களோ இல்​லாத சூழலில் தான் சர்​வேஷின் விளை​யாட்டு வாழ்க்கை தொடங்​கியது.

அவரது தந்​தை​யும் சிறு​வயதுப் பயிற்​சி​யாள​ரும் சேர்ந்​து, அறு​வடைக்​குப் பின் எஞ்​சும் சோளத் தட்​டைகள், பஞ்சு மற்​றும் விவ​சாயக் கழி​வு​களைக் கொண்டு தயாரித்த தற்​காலிகத் தரை​யிறங்​கும் குழிகளி​லேயே சர்​வேஷ் குஷாரே உயரம் தாண்​டும் பயிற்​சியை மேற்​கொண்​டார். வறுமை​யும் வசதி​யின்​மை​யும் துரத்​தி​னாலும், தடைகளைத் தாண்டி பாயும் அவரது லட்​சி​யக் கனவுக்கு அவை ஒரு​போதும் தடை​யாக இருந்​த​தில்​லை.

நேற்​றைய இறு​திப்​போட்​டி​யில், 2.25 மீட்​டர் உயரத்தை மிக​வும் லாவக​மாகத் தாண்டி பதக்​கத்தை உறுதி செய்​தார் குஷாரே. தொடர்ந்து 2.28 மீட்​டர் உயரத்​தைக் கடக்க அவரும், ஜமைக்​கா​வின் ரொமைன் பெக்ஃ​போர்​டும் மேற்​கொண்ட முயற்​சிகள் பலனளிக்​க​வில்​லை.

இரு​வரும் ஒரே உயரத்​தைக் கடந்​திருந்த போதி​லும், ‘கவுண்ட்​-பேக்’ விதி​யின்​படி குறைந்த முயற்​சிகளில் அந்த உயரத்தை எட்டிய​தால் ஜமைக்கா வீரருக்கு தங்​கப் பதக்​கம் சென்​றடைந்​தது. நூலிழை​யில் தங்​கம் கைநழு​வி​னாலும், மனம்​தள​ராமல் வெள்ளிப் பதக்​கத்​தைக் கைப்​பற்றி இந்​திய விளை​யாட்டு வரலாற்​றில் புதிய அத்​தி​யா​யத்தை எழு​தி​யுள்​ளார் குஷாரே.

வெள்​ளிப் பதக்​கம் வென்ற பின்​னர் சர்​வேஷ் குஷாரே கூறும்​போது, ” பெரிய அளவி​லான சர்​வ​தேசத் தொடரில் நான் வெல்​லும் முதல் பதக்​கம் இது​வாகும். ஆசிய மற்​றும் காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்​டிகளே நம்மை ஒலிம்​பிக் கனவை நோக்கி உந்​தித் தள்​ளும் தளங்​கள். அடுத்து வரும் ஆசிய விளை​யாட்​டுப் போட்டியில் நாட்​டுக்​காக நிச்​ச​யம் தங்​கப் பதக்​கம் வெல்​வதே என் இலக்கு” என்​றார்.

கடந்த மாதம் புவனேஸ்​வரில் நடந்த தேசிய சாம்​பியன்​ஷிப்​பில் சர்​வேஷ் குஷாரே 2.31 மீட்​டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையைப் படைத்​திருந்​தார். மேலும், சமீபத்​தில் மொனாக்​கோ​வில் நடை​பெற்ற புகழ்​பெற்ற ‘டைமண்ட் லீக்’ தொடரில் வெண்​கலம் வென்​று, நீரஜ் சோப்​ரா​வுக்​குப் பின் டைமண்ட் லீக் பதக்க மேடை​யில் ஏறிய 4-வது இந்​தி​யர் என்ற வரலாற்​றுச் சாதனையை​யும் அவர் எட்​டி​யிருந்​தார்.

Spread the love