July 4, 2026

“வாக்குத் திருட்டு, சீட் திருட்டு, காணிக்கை திருட்டு நடக்கும் மூன்று இன்ஜின் அரசு இது” – ஜெயராம் ரமேஷ்

புதுடெல்லி: வாக்குத் திருட்டு, சீட் திருட்டு, காணிக்கை திருட்டு ஆகியவை நடைபெறும் மூன்று இன்ஜின் அரசு இது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளருமான ஜெயராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதில் கலந்து கொண்டு உரையாற்றி, கருத்துகளைக் கேட்கிறார். ஆனால், பின்னர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகங்களால் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு வழங்கப்படும் நிகழ்ச்சி நிரல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை.

தொகுதி மறுவரையறை மசோதாவை அவர்கள் மீண்டும் கொண்டு வருவார்கள் என்பதை அறிந்தே நாங்கள் இந்த மழைக்காலக் கூட்டத் தொடருக்குச் செல்கிறோம். அவர்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தையும் மீண்டும் கொண்டு வரலாம். பல முயற்சிகள் செய்தும் அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், இப்போது அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கட்சிகளைப் பிளக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கப்போவதில்லை. இந்தியாவின் அரசியலைமைப்பை மாற்றுவதே அவர்களின் உண்மையான நோக்கம். 400 இடங்களைக் கடக்க முயன்றதன் நோக்கமே அரசியலமைப்பை மாற்றும் அளவுக்கு வலிமையை அடைவதற்காகத்தான். சமூக நீதி தொடர்பான இடஒதுக்கீடுதான் இங்கு முக்கிய விவகாரம். அவர்கள் அதிலிருந்து தப்பிக்க விரும்புகிறார்கள். அதை ஒழிக்க விரும்புகிறார்கள்” என தெரவித்தார்.

இந்திய தலைமை நீதிபதிக்கு இண்டியா கூட்டணி எழுதிய கடிதம் குறித்துப் பேசிய ஜெயராம் ரமேஷ், “இது எஸ்ஐஆர் செயல்முறை மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான செயல்பாடு குறித்த கவலைகளை வெளிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி. நமது தேர்தல் அமைப்பின் மீது மக்கள் ஒரு காலத்தில் கொண்டிருந்த நம்பிக்கை இப்போது கடுமையாக சிதைந்து போயுள்ளது குறித்து இது பேசுகிறது.

தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகின்றன என்று மக்கள் நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். நமது அரசியலமைப்பும் தேர்தல் முறையும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. தேர்தல் முடிவுகள் முன்பே தீர்மானிக்கப்பட்டால் தேர்தல்களை நடத்துவதில் என்ன பயன்?

மேற்கு வங்கம், பிஹார், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகள், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரிடம் இருந்து தேர்தல் ஆணையம் உத்தரவுகளைப் பெறுகிறது என்பதையே காட்டுகின்றன” என்று தெரிவித்தார்.

அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு குறித்து பாஜக அரசை கடுமையாக விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ். “ராமர் கோயில் பெயரால் வாக்குகள் பெறப்பட்டன. இப்போது ராமர் பெயரே களங்கப்படுத்தப்படுகிறது. கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களில் நன்கொடைகள் திருடப்பட்ட விவகாரங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் இத்தகைய திருட்டுக்கள் நடக்கின்றன? ஏனெனில், இந்த அறக்கட்டளைகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களைப் பற்றி பிரதமருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் தெரியாதா?

அயோத்தியில் நன்கொடைகள் திருடப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. வாக்குத் திருட்டு, மாநிலங்களவை சீட் திருட்டு, காணிக்கைத் திருட்டு ஆகியவை நடக்கும் மூன்று இன்ஜின் அரசு இது” என்று அவர் கூறினார்.

சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்திருப்பது குறித்துப் பேசிய ஜெயராம் ரமேஷ், “சீனாவுக்கான நமது ஏற்றுமதி வளரவில்லை. மாறாக, இறக்குமதி அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அது 115 பில்லியன் டாலராக அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வர்த்தக பற்றாக்குறை சாதனை அளவை எட்டியுள்ளது. நாம் தலைகுணித்து நிற்கிறோம்.

நாம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது ஒருதலைப்பட்சமான ஒப்பந்தம். அது ஒரு ஒப்பந்தம் அல்ல, ஒரு கொள்ளை. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளாக சீனா விவகாரம் குறித்து (நாடாளுமன்றத்தில்) விவாதிக்கப்படவில்லை. பல பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளன. வெளியுறவுக் கொள்கை குறித்த விவாதத்தை அவர்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை” என்று குற்றம் சாட்டினார்.

Spread the love