புதுடெல்லி: தெற்கு வியட்நாம் தீவுப் பகுதியில் சனிக்கிழமையன்று இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். கரைப்பகுதியில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, வெறும் 300 மீட்டர் தொலைவிற்குள் படகு கவிழ்ந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் ஆசிஷ் குமார் (48). செல்போன் விநியோகஸ்தராகப் பணியாற்றி வரும் அவர் விபத்து குறித்து கூறியதாவது: நாங்கள் அனைவரும் ‘லாவா மொபைல்’ நிறுவனத்தின் விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள். நிறுவனத்தின் வருடாந்திர சுற்றுலாவுக்காக வியட்நாம் சென்றிருந்தோம்.
இந்த நிலையில், வியட்நாமின் ‘ஹான் மே ரட் நிகோய்’ தீவிலிருந்து மற்றொரு தீவுக்குச் செல்வதற்காக சுற்றுலாப் பயணிகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அதில் 32 இந்தியர்களை ஏற்றிச் சென்ற முதல் படகு புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மற்ற இரு குழுவினரும் தீவிலேயே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் இந்தத் துயரம் அரங்கேறியது.
படகு புறப்பட்டு வெறும் 300 மீட்டர் தூரம் கூடச் சென்றிருக்காது. துரதிர்ஷ்டவசமாக அதற்குள் திடீரென கவிழ்ந்துவிட்டது. நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததால், என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது. தீவை விட்டுப் படகு நகர்ந்த உடனேயே இந்த விபத்து நடந்ததால், கரையில் இருந்த நாங்கள் அனைவரும் உதவிக்காகக் கூச்சலிட்டோம். அப்போது வானிலை மோசமாக இல்லை.
காற்று வீச்சும் சாதாரண அளவில்தான் இருந்தது. உடனடியாக மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கியவர்களையும், உடல்களையும் கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிப்பதற்குக் கூட மருத்துவக் குழுவினர் யாரும் உடனடியாக வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, 15 இந்தியர்கள் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக படகின் கேப்டனை கைது செய்துள்ள போலீஸார் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Stories
ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி – ஈரான் அதிபர் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: அமெரிக்கா தகவல்
உலகப் புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ நூலின் எழுத்தாளர் ராபர்ட் கியோசாகிக்கு ரூ.11,000 கோடி கடன்
கவனம் ஈர்த்த முதல் பெண் ஹெலிகாப்டர் கேப்டன் – நேபாளத்தில் 6 நாளில் 100 மீட்புப் பணிகள்