புதுடெல்லி: டெல்லியில் இன்று ‘ஜனநாயகப் போராட்டம்’ நடத்துவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இன்று டெல்லியில் உள்ள பாராகம்பா சாலையில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை பேரணி நடத்தவுள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நடத்தப்படும் போராட்டத்தின் வியூகம் இன்று மாற்றப்பட்டுள்ளது.
எதிர்கட்சிகளின் போராட்டமான இதற்கு காங்கிரஸ் ‘ஜனநாயகப் போராட்டம்’ என பெயரிட்டு அறிவித்துள்ளது. இதுபோல், அந்தப் போராட்டத்தின் பிம்பத்தை மாற்றியமைப்பதற்கான ஒரு வியூகம் தற்போது வகுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களில் பல்வேறு தரப்பினரின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் டெல்லியில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் மற்றும் தெருக்களில் திரண்ட மக்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த உத்தி மாற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் நடத்திய நான்கு நாள் போராட்டத்தின்போது, அவர்களின் தலைவர்களும் தொண்டர்களும் மட்டுமே தெருக்களில் காணப்பட்டனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் அக்டோபர் 10 முதல் துவங்கியது.
இந்தப் போராட்டம் இறுதியில் முழுமையாக நடைபெறவில்லை என்றாலும், டெல்லி வீதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டதைக் காண முடிந்தது. தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரானப் போராட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.
போராட்டத்துக்குச் சற்று முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஒரு காணொளிச் செய்தியை வெளியிட்டார். அதில், சமூக அமைப்புகள் மற்றும் பிற தரப்பினர் இன்றைய போராட்டத்தில் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இண்டியா கூட்டணி இன்று பிற்பகல் 2 மணிக்கு பாரகம்பா சாலையில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை மீண்டும் ஒரு பேரணியை நடத்துகிறது. இன்றைய போராட்டத்தின்போது கட்சிக்குரிய கொடிகளுக்குப் பதிலாகத் தேசியக் கொடியை (மூவர்ணக் கொடி) கையில் ஏந்திச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தனது கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போராட்டம் ஜனநாயகத் தன்மையுடன் தெரிவதையும், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்ப்தையும் நோக்கமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அதிக அளவில் காணப்பட்டன. இதன் மீது இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே அதிருப்தி ஏற்பட்டது.
மேலும், கடந்த நான்கு நாட்களாகப் பல முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் போராட்டங்களில் பங்கேற்கவில்லை. இதன் மீதும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்த கேள்விகள் எழும்பின.
இதைக் கருத்தில் கொண்டும் இன்றைய போராட்டத்துக்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் கட்சிக்குரிய கொடிக்குப் பதிலாகத் தேசியக் கொடியைக் கையில் ஏந்துவார்கள்.
இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் தங்கள் கட்சித் தொண்டர்களையும் அழைத்து வருமாறு காங்கிரஸ் கேட்டுக்கொண்டது.
எனவே மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் இடதுசாரி ஆகியோரின் கட்சிகள் போன்ற பிற கட்சிகளின் தொண்டர்களும் இன்று பங்கேற்கிறார்கள். வழக்கறிஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளும் இண்டியா கூட்டணியின் இன்றைய போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்துக்கு ’சலோ டெல்லி (டெல்லி செல்வொம்)’ – ஜனநாயகத்துக்கான பேரணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த முக்கிய மாற்றத்தின் மூலம், குறிப்பாக காங்கிரஸ் கட்சி, இதனை வெறும் அரசியல் போராட்டமாக மட்டும் காட்டாமல், ‘ஜென்ஸீ’ தலைமுறையினரும் மற்றவர்களும் பங்கேற்கக்கூடிய ஒரு ஜனநாயக இயக்கமாக முன்னிறுத்த முயற்சிக்கிறது.
இதன் மூலம் இளைஞர்களும் மற்ற சாமானிய மக்களும் இந்தப் போராட்டத்தில் அவர்களுடன் இணைய முடியும். பல உத்திகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இந்த உத்திகள் எந்தளவுக்குப் பலனளிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More Stories
டெல்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை!
“வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வீசப்படுவீர்கள்!” – ஒன்றிய அரசுக்கு CPI(M) எம்பி கடும் எச்சரிக்கை
சிஜேபி ஜந்தர் மாந்தர் போராட்டம் 2.0: போலீஸ் கைது நடவடிக்கை – டெல்லி ஸ்தம்பிப்பு