April 8, 2026

‘வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து 10 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை!’

சென்னை: வீட்டு உபயோகத்​து​கான காஸ் சிலிண்​டர் முன்​ப​திவு செய்து 10 நாட்​கள் ஆகி​யும், நுகர்​வோருக்கு டெலிவரி செய்​யாமல் ஏஜென்​சிகள் தாமதம் செய்​வ​தாக பொது​மக்​கள் குற்​றம்​ சாட்டியுள்​ளனர்.

ஈரான் மீதான அமெரிக்கா- இஸ்​ரேல் போரி​னால், இந்​தியா உட்பட பல்​வேறு நாடு​களில் எரிபொருள் விநி​யோகம் பாதிக்கப்பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் தற்​போது எல்​பிஜி காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர் விநி​யோகிக்​கப்​படும் நிலை​யில், வணிக பயன்​பாட்டு சிலிண்​டர் நிறுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால், பெரும்​பாலான ஓட்​டல்​கள் மூடப்பட்​டுள்​ளன.

இதற்​கிடை​யில், சிலிண்​டர் முன்​ப​திவு கால இடைவெளியை நகர்புறங்​களில் 21 நாட்​களில் இருந்து 25 நாட்​களும், கிராமப்​ புறங்​களுக்கு 45 நாட்​கள் இடைவெளி என மத்​திய அரசு அறிவித்தது. சமையல் காஸ் சிலிண்​டர் போது​மான அளவு கையில் இருப்​ப​தாக​வும், தட்​டுப்​பாடு இன்றி காஸ் சிலிண்​டர் விநியோகிக்​கப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டாலும், சென்​னை​யில் சில இடங்​களில் உள்ள காஸ் ஏஜென்சி அலு​வலங்​களின் முன்பு காலி சிலிண்​டர்​களு​டன் பொது​மக்​கள் நிற்​கின்​றனர்.

வில்​லி​வாக்​கம், வடபழனி உள்பட பல இடங்​களில் காஸ் ஏஜென்சி அலு​வல​கங்​களில் வாடிக்​கை​யாளர்​கள் குவிந்து வரு​கின்​றனர். முன்​ப​திவு செய்​ததற்​கான குறுந்​தகவல் செல்​போன்​களுக்கு வந்து 10 நாட்​கள் ஆகி​யும், சிலிண்​டர் விநி​யோகம் செய்ய வில்லை என அவர்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர்.

பொது​வாக காஸ் சிலிண்​டர் முன்​ப​திவு செய்து டெலிவரிக்​கான அங்​கீ​கார குறி​யீடு (டிஏசி) எண் ஒதுக்​கீடு செய்த பின்​னர் குறிப்பிட்ட நாட்​களுக்​குள் காஸ் சிலிண்​டர் விநி​யோகம் செய்யப்பட வேண்​டும். ஆனால், பலருக்கு டிஏசி எண் ஒதுக்கப்பட்டு பல நாட்​கள் ஆகி​யும் சிலிண்​டர் டெலிவரி செய்யப்பட​வில்​லை.

இது குறித்​து, சென்​னையை சேர்ந்த வாடிக்​கை​யாளர்​கள் கூறியதாவது: நகர்​புறங்​களில் 25 நாட்​களுக்கு பிறகு, காஸ் சிலிண்​டர் முன்​ப​திவு செய்ய கட்​டுப்​பாடு​களை கொண்​டு​ வந்துள்ளனர். இதன்​படி, முறை​யாக முன்​ப​திவு செய்​து, 10 நாட்களை கடந்​து​விட்​டது. இது​வரை டிஏசி எண் வரவில்​லை. இதன்​ பிறகு, எப்​போது டெலிவரி செய்​வார்​கள் என்​பதே தெரியவில்​லை.

இதுத​விர, டிஏசி எண் வந்த வாடிக்​கை​யாளர்​களுக்கு எப்​போது விநி​யோகம் செய்​வார்​கள் எனவும் தெரிய​வில்​லை. ஏஜென்​சி​யில் கேட்​டால், உங்​களுக்கு சிலிண்​டர் ஒதுக்​கி​விட்​டோம். டெலிவரி செய்​பவர்​களிடம் கேளுங்​கள் என்று கூறுகின்​றனர். டெலிவரி செய்​பவர்​களிடம் கேட்​டால் சிலிண்​டர் வரவில்லை என்​கின்​றனர்.

சம்​பந்​தப்​பட்ட ஏஜென்​சிகளுக்கு போன் போட்​டாலும் எடுப்பதில்லை. நேரில் சென்று முறை​யிட்​டாலும், சரி​யாக பதில் கூறு​வது இல்​லை. வீட்டு உபயோக சிலிண்​டர்​களை வாடிக்கையாளர்​களுக்கு கொடுக்​காமல் ஓட்​டல்​களில் அதிக விலைக்கு விற்​பவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

இது குறித்​து, இந்​தி​யன் ஆயில் நிறுவன அதி​காரி ஒரு​வர் கூறுகையில், “சென்​னை​யில் மக்​கள் தொகை அதி​க​மாக உள்ளதால், சிலிண்​டர் இணைப்​பு​களும் அதி​க​மாக உள்​ளது. இப்பகு​தி​களில், பதற்​றத்​தில் சிலிண்​டர் அதிக அளவு முன்​ப​திவு நடை​பெறு​வ​தால், ஏஜென்​சி​யால் சமாளிக்க முடி​யாத நிலை உள்ளது.

ஆயிரம் சிலிண்​டர் விநி​யோகம் செய்​யக்​கூடிய ஒரு ஏஜென்சியால், 5 ஆயிரம் காஸ் சிலிண்​டர்​கள் வரை பதிவு செய்​து, காத்​திருக்​கும் நிலை இருக்​கிறது. இருப்​பினும், முன்​ப​திவு செய்த தேதி அடிப்​படை​யில் வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்கப்படுகிறது. சிலிண்​டர்​ கிடைப்​ப​திலோ, விநியோகிப்பதிலோ பிரச்​சினை இல்​லை” என்​றார்​.

Spread the love