April 17, 2026

வீரர்​கள் பொறுப்பை உணர்ந்துள்ளனர்… மெல்ல மெல்ல முன்​னேறி வருகிறோம்’ – சிஎஸ்கே கேப்​டன் ருதுராஜ் கெய்க்வாட்

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் சேப்பாக்கம் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி 32 ரன்​கள் வித்தியாசத்​தில் 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்​தி​யது. 193 ரன்​கள் இலக்கை துரத்​திய கொல்​கத்தா அணி​யானது 7 விக்கெட்கள் இழப்​புக்கு 160 ரன்​கள் எடுத்து தோல்வி அடைந்​தது.

சிஎஸ்கே அணி​யின் பந்​து​வீச்​சில் நூர் அகமது 4 ஓவர்​களை வீசி 21 ரன்​களை மட்​டும் விட்​டுக்​கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்​தி​னார். சிஎஸ்கே அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. 5 ஆட்​டங்​களில் விளையாடி உள்ள சிஎஸ்கே 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களை பெற்​றுள்​ளது.

போட்​டிக்கு பின்​னர் சிஎஸ்கே கேப்​டன் ருது​ராஜ் கெய்க்வாட் கூறிய​தாவது: மெல்ல மெல்ல தற்​போது​தான் அணி ஒரு வடிவம் பெறு​வதை என்​னால் உணர முடிகிறது. ஒவ்​வொரு​வருக்​கும் தங்​களு​டைய பொறுப்பு என்ன, எந்த ஓவர்​களை வீச வேண்​டும், என்ன லெந்த்​களில் பந்​து​வீச வேண்​டும் என்​பது ஓரள​விற்​குத் தெரிந்​திருக்​கிறது.

அணி​யின் தேவைக்கு ஏற்ப அவர்​கள் தங்​களை மிகச் சிறப்​பாக மாற்​றிக்​கொண்​டும், பழக்​கப்​படுத்​திக்​கொண்டும் வரு​கிறார்​கள் என்று நான் நினைக்​கிறேன். நான் ஏற்​கெனவே சொன்​னது போல, மெல்ல மெல்ல நாங்கள் முன்​னேறி வரு​கிறோம். நாங்​கள் நல்ல ஸ்கோரை தற்​காத்​துக் கொண்​டோம்.

முதல் ஏழு அல்​லது எட்டு ஓவர்களுக்​குப் பிறகு ஆடுகளத்தின் தன்மை முற்​றி​லும் மாறியது. எனவே 192 ரன்​கள் என்​பது சராசரிக்​கும் மேலானது என்றே கருதினேன். ஆடு​களத்​தில் பந்து கொஞ்​சம் திரும்ப ஆரம்பித்​தது, அதே​போல் கொஞ்​சம் நின்று வந்​தது. முதலில் நாங்​கள் 220 ரன்கள் வரை சேர்க்க முடி​யும் என கரு​தினோம். ஆனால் ஆடு​களத்​தின் தன்​மை​யால் 190 அல்லது 180 ரன்​கள் சிறந்த ஸ்கோ​ராக இருக்​கும் என்று நினைத்​தோம். பந்​து​வீச்​சில் சிறந்த பவர்​பிளேயை அமைக்க வேண்​டி​யிருந்​தது. இவ்வாறு அவர்​ கூறி​னார்​.

Spread the love