புதுடெல்லி: பதற்றத்துக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியாவை நோக்கி 2 எல்பிஜி கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான்-அமெரிக்க, இஸ்ரேல் படைகளுக்கு இடையே போர் நடந்து வந்தது. இதனிடையே பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்தின் பேரில் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது. இருந்தபோதிலும் இந்தியாவை நோக்கி புறப்பட்ட கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்து வருகிறது.
இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிய சில கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன. இதற்கிடையே ஈரான் துறைமுகங்களை முடக்கும் வகையில் ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி முதல் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் அந்த ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் நேற்று சமையல் எரிவாயுவை (எல்பிஜி) ஏற்றிக் கொண்டு 2 இந்தியக் கப்பல்கள் இந்தியாவை நோக்கிகிளம்பின.
இந்த 2 கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்து இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன என்று தெரியவந்துள்ளது. சைமி, என்.வி.சன்ஷைன் ஆகிய 2 வர்த்தக சரக்குக் கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து வந்து கொண்டிருக்கின்றன என்று இந்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடுமையான பதற்றத்துக்கு இடையே இந்தக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன. கடந்த 2 மாதங்களில் 13 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து இந்தியாவுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் அனுமதி
இதனிடையே ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களுக்கு அனுமதி தரப்படும் என்று ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சமையல் காஸ், கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் செல்கின்றன.
இந்த வழியாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு மட்டுமே ஈரான் அனுமதி வழங்கும். அவ்வாறு செல்லும் வர்த்தகக் கப்பல்கள், ஈரான் நாட்டின் கடற்படைக்கு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மீறினால் அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும்” என்றார்.

More Stories
மேற்காசிய பதற்றம் | ஹவுதி தாக்குதலுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்: சவூதி அரேபியா எச்சரிக்கை
ஹார்முஸ் பாதுகாப்புச் செலவை பிற நாடுகள் அமெரிக்காவுக்கு தர வேண்டும்: ட்ரம்ப் கெடுபிடி
உக்ரைன் போரை நிறுத்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்: ரஷ்ய அதிபர் புதின் வரவேற்பு