சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஸ்கிரைப் நியமன விதிமுறைகளில் தேர்வுத் துறை சில திருத்தங்களை செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை இந்த பணிக்கு நியமிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் க.சசிகலா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வர்களின் முகப்புத் தாள்கள் முதன்மை விடைத்தாள்களுடன் தைக்கப்பட்டுள்ளதை தேர்வுக்கு முன்னரே உறுதி செய்ய வேண்டும்.
இதுதவிர, சொல்வதை எழுதுபவர் (ஸ்கிரைப்) நியமனங்களில் தேர்வு நடைபெறும் பாடத்தை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. அதேபோல, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறை கண்காணிப்பு பணியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு வழங்கப்படும் கோடிடப்படாத கூடுதல் விடைத்தாள்களை போதுமான அளவு பெற்று வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
10th English exam : ஆங்கில தாள் சற்று கடினம்.. மதிப்பெண் குறைந்துவிடுமோ என மாணவர்கள் அச்சம்..
மாதம் ரூ.40,000 உதவித் தொகையுடன் பிஎச்டி, எம்எஸ் படிப்புகளுக்கு சேர்க்கை அண்ணா பல்கலை. அறிவிப்பு
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான்: அமைச்சர் அன்பில் மகேஷ்