புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் கடைசி அமர்வு கடந்த ஆகஸ்ட் 13-ல் நடைபெற்றது. 100 நாட்களைக் கடந்தும் இக் கூட்டத்தொடர் முறையாக முடித்து வைக்கப்படவில்லை. இது நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிக நீண்ட அளவாகும். இதற்கு முன்பு 2008-ல் 87 நாள் இடைவெளிதான் சாதனையாக இருந்தது.
இதன் பின்னணியில் இருக்கும் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் தேசிய அரசியலில் தீவிரமடைந்துள்ளன. இந்த கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவராததற்கு ஒரு முக்கியக் காரணம் உள்ளது. விதிகளின்படி, முறையாக முடிவுக்குக் கொண்டுவரப்படாத ஒரு கூட்டத்தொடரை, வெறும் மூன்று தினங்கள் முன்பான அறிவிப்பிலேயே மீண்டும் கூட்ட முடியும்.
ஆனால், ஒரு கூட்டத்தொடர் முறையாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு, புதிய கூட்டத்தொடருக்கான அறிவிப்பு, குறைந்தது 2 வார காலம் முன்னதாக வெளியிடப்பட வேண்டும். எனவே, கால தாமதத்தின் பின்னணியில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கான மூன்றில் 2 பங்கு பெரும்பான்மைக்காக மத்திய அரசின் ஆதரவு திரட்டல் இருப்பது தெரிகிறது.
எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், திமுகவும், ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸின் கருத்துடன் பெரும்பாலும் உடன்படுவதாகத் தெரிகிறது. இருப்பினும், திமுக மற்றும் இண்டியா கூட்டணியின் பிற சில கட்சிகளுக்கு, காங்கிரஸின் நிபந்தனைகளில் சில மாற்றுக் கருத்துகள் உள்ளன. இதன்படி, 2023-ம் ஆண்டு சட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை செயல்முறை மசோதாவில் சேர்க்கக் கூடாது என காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகும் மக்களவை இடங்களின் மொத்த எண்ணிக்கையை 543 ஆகவே வைத்திருக்க வேண்டும். அதை அதிகரிக்கக்கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் முதல் கோரிக்கையாகும். இதுபோல 2023-ல் நிறைவேறிய மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தி, தற்போதுள்ள 543 இடங்களில் 182 இடங்களை (33%) பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், காங்கிரஸ், திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், மத்திய அரசு இன்னும் இதற்குப் பதிலளிக்கவில்லை. ஆனால் பெண்கள் அதிகாரமடைவதைத் தடுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.
இச்சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அடுத்த பகுதி டிசம்பர் 2-ம் வாரத்தில் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்துக்குள் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில், புதிய எல்லைகளின் அடிப்படையில் 2029-ல் வரும் மக்களவைத் தேர்தலை நடத்த முடியாது.

More Stories
கொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு வாபஸ்: சோனியா, ராகுல் குற்றச்சாட்டு
டிச.16-ல் வங்கதேசம் திரும்ப ஷேக் ஹசீனா திட்டம்
விடுதலைப் புலிகள் மறுசீரமைப்பு சதி வழக்கு: அப்ரூவராக மாறிய இலங்கை நபருக்கு ஜாமீன்