புதுடெல்லி: இஸ்ரோவில் இருந்து விஞ்ஞானிகள் தொடர்ந்து விலகி வருவதை அடுத்து, அவர்களது விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா விதிகளை மத்திய அரசு கடுமையாக்கி உள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய விண்வெளித் திட்டமான ‘ககன்யான்’ (மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்) மற்றும் இதர முக்கியத் திட்டங்களில் பணியாற்றும் ‘குரூப் ஏ’ பிரிவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு கடிதங்களை இனி வழக்கமான நடைமுறையாக ஏற்று ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று இஸ்ரோவின் முக்கிய மையங்களுக்கு மத்திய விண்வெளித்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதியின்படி, இஸ்ரோவின் அந்தந்த விண்வெளி மைய இயக்குநர்களே விஞ்ஞானிகளின் ராஜினாமா மற்றும் விருப்ப ஓய்வு கடிதங்களை ஏற்று ஒப்புதல் அளிக்க அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞானிகளின் தொடர் விலகல் காரணமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், இந்த அதிகாரம் மீண்டும் மத்திய விண்வெளித் துறையின் (DoS) நேரடி கட்டுப்பாட்டிற்கே கொண்டு வரப்பட்டுள்ளது.
பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம், திருவனந்தபுரம் விக்ரம் சாரா பாய் விண்வெளி மையம் உள்ளிட்ட அனைத்து இஸ்ரோ மையங்களுக்கும் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி விஞ்ஞானிகளின் ராஜினாமா கடிதங்களை இறுதி ஒப்புதலுக்காக, அந்தந்த மைய இயக்குநர்களின் தெளிவான பரிந்துரைகளுடன் விண்வெளித் துறைக்கு அனுப்ப வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

More Stories
இளம் இயற்பியல் அறிஞர் சப்ரினா பாஸ்டர்ஸ்கி ‘அடுத்த ஐன்ஸ்டீன்’ என புகழப்படுவது ஏன்?
இந்தியா
2029-ல் பூமிக்கு மிக அருகில் வரும் மாபெரும் விண்கல்.. இது பூமிக்கு ஆபத்தா?நாசா முழு தகவல் இங்கே!