மிட்சுபிஷி நிறுவனம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடி மதிப்பில் குளிர்சாதன உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்துவைத்தார்

திருவள்ளூர்: ஜப்பான் நாட்டை சேர்ந்த மிட்சுபிஷி எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான, மிட்சுபிஷி எலெக்ட்ரிக் இந்தியா நிறுவனம் ரூ.2,091 கோடி முதலீட்டில், 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த ஆலையை அமைத்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மகேந்திரா தொழிற்பூங்காவில் 2.10 லட்சம் ச.மீ. பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் அறை குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் 6.50 லட்சம் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி செய்யலாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இந்த ஆலையைத் திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா பேசும்போது, “உற்பத்தித் துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகம் மட்டுமே தான் 11.19 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தமிழக மாணவர்களை பணிக்கு அமர்த்துகின்றன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின் சாதனப் பொருட்களில் 41 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது” என்றார். நிகழ்வில், அமைச்சர் நாசர், தலைமைச் செயலர்நா.முருகானந்தம், வழிகாட்டி நிறுவன இயக்குநர் தாரேஸ் அகமது, தொழில் துறைச் செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிக்கு சிட்கோ-மாநகராட்சி ஒப்பந்தம்
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்
தமிழகம் வரும் பிரதமர் அறுபடை வீடுகளையும் சுற்றிப் பார்க்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு