பனாஜி: வரும் 2029-ம் ஆண்டில் போதையில்லாத இந்தியா உருவாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கோவாவின் பனாஜி நகரில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்கு போதையில்லாத இந்தியா உருவாவது அவசியமாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்களால் நாடு முழுவதும் நக்சல் தீவிரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்துள்ளோம். குறிப்பாக காஷ்மீரில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இடதுசாரி தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு மாநிலங்களில் நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு இருக்கிறது.
திருப்பதி முதல் பசுபதி வரையிலான மாவோயிஸ்ட் வழித்தடத்தில் ஏராளமான தீவிரவாதிகள் ஆயுதங்களை கைவிட்டு பாதுகாப்பு படைகளிடம் சரண் அடைந்து உள்ளனர். நக்சல் தீவிரவாதத்தை ஒழித்தது போன்று நாடு முழுவதும் போதைப் பொருள் பயன்பாட்டையும் ஒழிப்போம். அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது வரும் 2029-ம் ஆண்டில் போதையில்லாத இந்தியா உருவாகும்.
இதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் சார்ந்த போதைப் பொருட்கள் கடத்தலில் 100 சர்வதேச குழுக்கள் ஈடுபட்டு உள்ளன. அந்த சட்டவிரோத குழுக்கள் அனைத்தும் ஒழிக்கப்படும்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய 100 குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். கடந்த 2014-ம் ஆண்டுக்கு முன்பாக போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக சிறிய அளவில் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏஎன்டிஎப் என்ற பெயரில் புதிய படைப்பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த படைப்பிரிவு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுகிறது.
மேலும் தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) வலுப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த அமைப்பில் அதிகாரிகள், அலுவலர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய, மாநில பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 1,400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். போதைப் பழக்கத்தில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
“மாணவர்கள் அதிக நேரம் மொபைல் பார்ப்பதை தவிர்க்க உதவுவீர்” – ஆசிரியர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
மகாராஷ்டிர முழுவதும் நடைபெறவுள்ள நவராத்திரி விழாக்களில் முஸ்லிம்களுக்கு தடை: விஹெச்பி அறிவிப்பு
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-17 ராக்கெட் வெற்றி