தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் கைப்பேசி எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் புனிதத் தன்மை மற்றும் ஆன்மிக சூழலைப் பாதுகாக்கும் வகையில், கோயில்களுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே தடை உள்ளது.
இருப்பினும், சில கோயில்களில் புகைப்படம், விடியோ, தற்படம் (செல்ஃபி), ரீல்ஸ் உள்ளிட்டவற்றை பக்தர்கள் பதிவு செய்வதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து செப்.1 முதல் 52 முதுநிலைத் திருக்கோயில்களில் பக்தர்கள் கைப்பேசி கொண்டு செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த நடைமுறை அறநிலையத் துறையில் 52 முதுநிலை திருக்கோயில்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோவிலுக்குள் செல்லும் முன்பு பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை பாதுகாப்பாக ஒப்படைக்க நுழைவு வாயில் மற்றும் காலணி பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அருகில் கைப்பேசி பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் உள்ள வசதிக்கு ஏற்ப இந்த பாதுகாப்பு பெட்டக வசதி அமைக்கப்பட்டு உள்ளது என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களிடம் இருந்து கைப்பேசிகளை பெற்று பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு ஒரு கைப்பேசிக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ரசீதும் வழங்கப்பட உள்ளது. மேலும் கோவில் வளாகத்திற்குள் கைப்பேசி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் கோவில் நுழைவு வாயில் மற்றும் கோவிலுக்கு வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பேரூர் பட்டீசுவரர் சுவாமி திருக்கோவில் மற்றும் மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைப்பதற்காக கோவில் வளாகத்திலேயே சிறப்பு பாதுகாப்பு கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் தங்களது கைப்பேசிகளை ஒப்படைத்து ரூ .5 கட்டணம் செலுத்தி ரசீது அல்லது டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
பாதுகாப்பு மையத்தில் கைப்பேசி ஒப்படைக்கும் போது வழங்கப்படும் ஒப்படைப்புச் சீட்டை பத்திரமாக வைத்துத் தரிசனம் முடிந்த பின் தங்களது கைப்பேசிகளைப் பக்தர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்
பேரூர் பட்டீசுவரர் சுவாமி திருக்கோவிலில் ஏற்கனவே கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய கட்டண பாதுகாப்பு வசதியுடன் கூடிய நடைமுறை இன்று முதல் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

More Stories
மேட்டூர் அணையை திறக்க வருகை தந்த முதல்வர் விஜய் – மக்கள் உற்சாக வரவேற்பு
சூரியனை சுற்றி திடீரென ஒளிவட்டம்: ஆர்வமுடன் படம் பிடித்த கடலூர், புதுவை மக்கள்
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் – முதல்வர் விஜய் புகழ் வணக்கம்