June 22, 2026

8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 3 கப்பல்கள்

புதுடெல்லி: இந்​திய தேசி​யக் கொடி​யுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாது​காப்பாக கடந்​துள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையி​லான போர் கடந்த பிப்​ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான் கடல் பகு​தி​யில் உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்​பந்தம் சில நாட்​களுக்கு முன்னர் கையெழுத்​தானது. இதையடுத்து அடுத்த 60 நாட்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சுதந்​திரமாகக் கப்​பல்​கள் செல்​லலாம் என்று ஈரான் அறி​வித்​தது. ஆனால், லெபனான் மீது இஸ்​ரேல் தொடர்ந்து தாக்​குதல் நடத்​தி​ய​தால், அமைதி ஒப்​பந்​தத்தை மீறிய​தாகக் கூறி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக நேற்​று​முன்​தினம் ஈரான் அறி​வித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்​நிலை​யில், இந்​திய தேசி​யக் கொடி ஏற்​றிய தேஷ் வைபவ், தேஷ் விபார், சன்​மார் ஹெரால்டு ஆகிய 3 கப்​பல்​கள் நேற்​று​முன்​தினம் ஒரே நாளில் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​தன. ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் நேற்​று​முன்​தினம் அறி​விப்​ப​தற்கு சில மணி நேரங்​களுக்கு முன்​னர் இந்த 3 கப்​பல்​களும் கடந்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அவற்​றில் மொத்​தம் 8.6 லட்​சம் டன் கச்சா எண்​ணெய் ஏற்​றிக் கொண்டு அந்​தக் கப்​பல்​கள் பாது​காப்​பாக ஜலசந்​தியை கடந்​துள்​ளன. இருதரப்​புக்​கும் இடை​யில் போர் தொடங்​கிய பிறகு, இந்​திய தேசி​யக் கொடி​யுடன் ஒரே நாளில் 3 கப்​பல்​கள் கடந்​துள்​ளது இதுவே முதல் முறை. இந்த 3 கப்​பல்​களை​யும் சேர்த்து இது​வரை 13 இந்​தி​யக் கப்​பல்​கள், 5 வெளி​நாட்டு கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​துள்​ளன.

இதுகுறித்து மத்​திய கப்​பல் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சர்​வானந்த சோனோவல் கூறும்​போது, ‘‘இந்​திய தேசி​யக் கொடி ஏற்​றிய அந்த 3 கப்​பல்​களி​லும் மொத்​தம் 94 இந்​தி​யர்​கள் பணிபுரி​கின்​றனர். கடல் பாது​காப்​பு, இந்​திய மாலுமிகளின் பாது​காப்​புக்கு மத்​திய அரசு அதிக முன்​னுரிமை அளித்து வரு​கிறது’’ என்​றார்.

அந்த 3 கப்​பல்​களில் சன்​மார் ஹெரால்டு கப்​பல், கடந்த ஏப்​ரல் 18-ம் தேதி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முயன்ற போது ஈரானின் இஸ்​லாமிய புரட்​சிப் படை​யினர் தாக்​குதல் நடத்​தினர். அதனால் கப்​பல் மீண்​டும் திரும்​பிச் சென்​றது. தற்​போது அந்​தப் பகு​தி​யைப் பாது​காப்பாக கடந்து வந்​துள்​ளது.

இந்​தக் கப்​பல் ஒடிசா மாநிலம் பரதீப் துறை​முகத்​துக்கு ஜூலை 1-ம் தேதி வந்​தடை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தேஷ் வைபவ் கப்​பல் குஜ​ராத்​தின் வடி​னார் துறை​முகத்​துக்​கும், தேஷ் விபார் கப்​பல் சிக்கா துறை​முகத்​துக்​கும் வரும் 24-ம் தேதி வந்​தடை​யும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதற்​கிடை​யில், எஸ்​எஸ்​எல் காவேரி, தேஷ் சுரக் ஷா ஆகிய 2 இந்தி​யக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடக்க காத்திருக்கின்றன என்று கப்​பல் போக்​கு​வரத்​தைக் கண்காணிக்கும் ‘மரைன்​டி​ராப்​பிக்’ போர்​டல் தெரி​வித்​துள்​ளது.

தற்​போது இந்​தி​யா​வுக்கு வரவேண்​டிய 31 கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் காத்​திருக்​கின்​றன. அவற்​றில் 16 கப்​பல்​களில் உரங்கள் உள்​ளன. அந்​தக் கப்​பல்​களும் ஒவ்​வொன்​றாக ஹார்முஸ்​ ஜலசந்​தி​யைக்​ கடந்​து வரும்​ என்​று எதிர்பார்க்கப்படுகிறது

Spread the love