புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை, சிறார் பாலியல் வீடியோ தொடர்பான விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் வருவது குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபலமான சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து செயல்படும் மெட்டா நிறுவனம் நிர்வகிக்கிறது. வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்படவுள்ள ‘யூசர்நேம்’ அம்சம் குறித்து விளக்கம் அளிக்க மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒரு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை, சிறார் பாலியல் வீடியோ குறித்த விளம்பரங்கள் இன்ஸ்டாகிராமில் அதிகம் வருவதாக செய்திகள் வெளியாயின. மெட்டாவின் விளம்பரக் கொள்கைகளில் பாலியல் வீடியோக்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இத்தகைய விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. இந்த விளம்பரங்கள் பார்வையாளர்களை டெலிகிராம் சேனல்களுக்கு அழைத்துச் செல்கின்றன. அங்கு பாலியல் தொடர்பான வீடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இது குறித்து மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்புமாறு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படியும், பாலியல் வீடியோக்கள் தொடர்பான விளம்பரங்களை நீக்கும் படியும் மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

More Stories
“மைலேஜ் குறைந்துவிட்டது” – E20 பெட்ரோல் கொள்கைக்கு எதிராக டெல்லியில் போராட்டம்
இந்தியாவில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை: நீரில் முழ்கிய மும்பை.. 3 மாநிலங்களுக்கு ரெட் அலெர்ட் – விவரம் இதோ
பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி