நாகர்கோவில்: விளையாட்டு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கார்கில் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 4,200 கி.மீ தூரத்தை, 67 நாட்களில் கடந்து கல்லூரி மாணவர் சாதனை படைத்தார்.
இந்தூரை சேர்ந்தவர் கார்த்திக் ஜோஷி (23). பயோ மெக்கானிக் இன்ஜினியரிங் முதலாண்டு படித்து வருகிறார். இந்தியாவில் வளர்ந்து வரும் அல்ட்ரா எண்ட் ரன்ஸ் விளையாட்டு வீரரான இவர், கடந்த மே 2-ம் தேதி கார்கிலில் இருந்து நீண்ட தூர ஓட்டத்தை தொடங்கினார். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 7 மாநிலங்கள் வழியாக 4,200 கி.மீட்டர் தூரத்தை கடந்து, நேற்று முன்தினம் தனது ஓட்டத்தை கன்னியாகுமரியில் நிறைவு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கார்கிலில் தொடங்கிய இந்த சாதனை பயணத்தின்போது உயரமான மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், வயல்வெளிகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாறுபட்ட வானிலைகளைக் கடந்து, இந்த ஓட்டத்தை நிறைவு செய்துள்ளேன். இன்றைய இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபட வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது ஓட்டத்தின் நோக்கம்.
இதற்கு முன்பு, தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகின் மிகப்பிரபலமான ஹாம்ரேட்ஸ் மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளேன். இதுவரை 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ஒடியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
பெங்களூருவில் உலக திருக்குறள் மாநாடு கோலாகலம்: தேசிய நூலாக அறிவிக்கக் கோரி தீர்மானம்
அமர்நாத் புனித யாத்திரை: 8,815 பக்தர்கள் புறப்பட்டனர்
கேரளாவின் சுரங்கப்பாதை திட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு