சென்னை: எழும்பூர் அரசு செயற்கை கருத்தரிப்பு மையத்துக்கு மருத்துவர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் விஜய் கடந்த 8-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, முதல்வர் என்ற அதிகார தோரணை எதுவும் இல்லாமல், தாய்மார்களுடன் சாதாரணமாக பேசியதையும், குழந்தைகளை தன் கைகளில் ஏந்தி கொஞ்சியதையும் மறக்க முடியாது.
தமிழகத்தில் முதல்முறையாக சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இலவச கருத்தரிப்பு மையத்தில் பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. பல்வேறு சவால்களை எதிர்கொண்டு மருத்துவர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
ஆனால், இந்த மையத்துக்கென்று மருத்துவர் பணியிடங்கள் இதுவரை உருவாக்காதது வருத்தமளிக்கிறது. அரசு உடனடியாக இந்த கருத்தரிப்பு மையத்துக்கு ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர் மற்றும் இரண்டு உதவிப் பேராசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
கரூரில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு முதல்வர் அரசு பணி வழங்கியதை வரவேற்கிறோம். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி அரசு வேலை வேண்டி 5 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணீருடன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், முந்தைய திமுக அரசு கருணை காட்டவில்லை.
கரோனா காலத்தில் மக்களை காப்பாற்ற போராடி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலைக்கான ஆணையை முதல்வர் வழங்க வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ஐ அமல் படுத்தி, அதன்படி ஊதியம் வழங்க வேண்டும். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திட முனைப்பு காட்டும் நம் முதல்வர், நிச்சயம் அரசு மருத்துவர்களின் வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
ரூ.1200 கோடியில் சென்னையில் புதிய தலைமைச் செயலகம்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
“தேர்தல் வாக்குறுதியின்படி ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக” – டிடிவி தினகரன்
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்: முதல்வர் விஜய்