பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 73 பேர் காயம் அடைந்தனர்.
தாய்லாந்து தலைநகரான பாங்காக் நகரின் சட்டுசக் பகுதியில் ‘ராங் பீர் நா லாட் ப்ராவ்’ என்ற பெயரில் பிரபல மதுபான மற்றும் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு மேடைக்கு அருகில் இருந்த மின்சாதனம் திடீரென வெடித்து தீப்பற்றியது. இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட அறை முழுவதும் தீ மிக வேகமாகப் பரவி, கரும் புகை சூழ்ந்துள்ளது.
இது தொடர்பான காட்சிகள் இணைய தளங்களில் வெளியாகியுள்ளன. அவற்றில் தீப்பிழம்புகள் சூழ்ந்த கேளிக்கை விடுதியின் முன்வாசல் வழியாக, வாடிக்கையாளர்கள் தங்களின் ஆடைகளில் தீப்பற்றிய நிலையில் அலறியபடி ஓடிவருவதை காணமுடிகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் அரை மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
எனினும் இந்த தீவிபத்தில் 9 ஆண்கள், 18 பெண்கள் என 27 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 73 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் படுகாயம் அடைந்த 25 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்தவர்களில் பலர்கரும் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். கேளிக்கை விடுதியின் கூரையில் எளிதில் தீப்பற்றக்கூடிய உட்புற அலங்காரப் பொருட்கள் இருந்தன. இதுவே தீ வேகமாகப் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
உயிரிழந்த பலரது உடல்கள் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டன. தீயிலிருந்து தப்பிக்க அவர்கள் அங்கு தஞ்சம் அடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ஏசி சாதனத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீப்பற்றி எரிந்த இடத்திலிருந்து மக்கள் தப்பி ஓட முயன்றபோது, அவசரகால வெளியேறும் வழிகள் தடுக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இது தொடர்பான விடுதி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தை தாய்லாந்து பிரதமர் அனுதின் சர்ன்விராகுல் நேற்று காலையில் நேரில் பார்வையிட்டார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயம் அடைந்தவர்களுக்கும் அரசு நிதியுதவி அறிவித்துள்ளது. தாய்லாந்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல.
கடந்த 2022-ல், பாங்காக் நகருக்கு தெற்கில் உள்ள ஒரு நகரில் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 2009 ஜனவரி 1-ம் தேதி பாங்காக் நகரில் ஒரு இரவு விடுதியில் புத்தாண்டு விழாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த 2024-ல் சட்டுசக் பகுதியில் உள்ள பிரபல திறந்தவெளி சந்தையில் மின் கசிவு காரணமாக நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 1,000 விலங்குகள் உயிரிழந்தன.

More Stories
ஐ.நா உறுப்பு நாடு உரிமைக்கான பாலஸ்தீன முயற்சிக்கு இந்தியா ஆதரவு
“ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும்; கப்பல்களுக்கு 20% கட்டணம்” – ட்ரம்ப் அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தியில் இரு யுஏஇ கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் காயம்