முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மின்சார தட்டுப்பாடு மற்றும் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரவாலகோட் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அப்போது இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இது, பாகிஸ்தான் அரசுக்கு எதிரான அதிருப்தியை மேலும் தீவிரப்படுத்தி அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சமூகத்தினர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை குறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் வெளியேற வேண்டும். ஆயுதமற்ற மக்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், “இணைய சேவை முடக்கத்தால், சுமார் 40 லட்சம் மக்கள் வெளியுலகத்துடன் தொடர்பை இழந்துள்ளனர். மக்களின் உயிரைக் காக்கவும், மனிதாபிமான உதவிகளை வழங்கவும் இந்தியா தலையிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய பூஞ்ச், தோடா எல்லைப் பகுதிகள் வழியாக கட்டுப்பாட்டுக் கோடு திறக்கப்பட வேண்டும்” என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாஸ் நேற்று கூறுகையில், “பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பகுதிகளில் பல தசாப்தங்களாக நடந்து வரும் சுரண்டல், அடிப்படை உரிமைகள் மறுப்பு, நிர்வாக ஒடுக்குமுறை ஆகியவற்றின் நேரடி விளைவுதான் இந்தப் போராட்டங்கள்.
உள்ளூர் மக்களின் நியாயமான குறைகளை தீர்ப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தான் அரசு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரின் மீதும் போலீஸ் வன்முறையை ஏவி வருகிறது. பலரின் உயிரிழப்புக்கு வழிவகுத்துள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை தடுத்து, இணைய சேவையையும் முடக்கியுள்ளது. பொதுமக்கள் மீதான இந்த ஒடுக்குமுறைக்கு பாகிஸ்தானை சர்வதேச சமூகம் பொறுப்பேற்க செய்ய வேண்டும்” என்றார்.

More Stories
இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன் உட்பட 3 பேர் விண்வெளி பயணம்
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமி உயிரிழப்பு; 10 பேர் படுகாயம்
ஐ.நா உறுப்பு நாடு உரிமைக்கான பாலஸ்தீன முயற்சிக்கு இந்தியா ஆதரவு