July 17, 2026

சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

மத்திய அரசின் முன் அனுமதியின்றி சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற தமிழக அமைச்சர்கள் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக மத்திய அரசு அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளி கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரும் சமீபத்தில் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர். இவர்களுடன் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், அமைச்சர்களின் தனி உதவியாளர்களும் இந்த வெளிநாட்டுப் பயணத்தில் உடன் சென்று வந்துள்ளனர்.

அரசு முறை பயணம் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் என இந்த வெளிநாட்டுப் பயணத்திற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த ஒட்டுமொத்தப் பயணமும் தற்போது ஒரு மிகப்பெரிய சட்டச் சிக்கலில் வந்து முடிந்துள்ளது. பொதுவாக, ஒரு மாநிலத்தின் அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, மத்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்பது கட்டாய விதியாகும். இத்தகைய பயணங்களின் போது அவர்கள் கட்டாயமாக ‘டிப்ளமேடிக் பாஸ்போர்ட்’ (Diplomatic Passport) மூலமாகவே பயணிக்க வேண்டும் என்ற நடைமுறையும் உள்ளது.

ஆனால், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த அந்த 2 அமைச்சர்களுமே மத்திய அரசின் எவ்வித முன் அனுமதியையும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, அவர்கள் தங்களுக்குரிய ‘டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை’ பயன்படுத்தாமல், தங்களுடைய சொந்த பாஸ்போர்ட் மூலமாகவே வெளிநாடு சென்று வந்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்றும், நாட்டின் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த விதிமீறலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான குற்றச் சாட்டாகக் கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ‘ஷோ காஸ்’ (Show Cause) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் முறையான அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எப்படி வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம்? என்று அந்த நோட்டீசில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்றும், அரசை முறையாக அவர்கள் வழிநடத்தத் தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Spread the love