July 22, 2026

காயத்துடன் கைதுசெய்யப்பட்ட ராகுல் காந்தி..?’ மத்திய அரசுக்கு தவெக கண்டனம்!

டெல்லியில் இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். இந்த நடவடிக்கையின்போது ராகுல் காந்திக்கு மூக்குப்பகுதியில் காயம் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது.

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் முறைகேடு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தது இந்திய அளவில் பதற்றம் ஏற்படுத்தியது. காயமடைந்தவர்களை சந்தித்த ராகுல்காந்தி, பிரதமர் இல்லம் அருகே பேரணியில் ஈடுபட்டபோது வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாக தவெக கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 1 மாதங்களாக நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று பேரணியில் ஈடுபட முற்பட்டனர். எனினும், அவர்களை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி டெல்லி காவல்துறையினர் கட்டுப்படுத்தியிருந்தனர். இந்த தாக்குதலில், 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்திருக்கும் சூழலில், இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், டெல்லியில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

Delhi Protest: CJP Seeks Education Minister’s Resignation

கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்PTI

இந்தசூழலில் தான், காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞர்களை சந்தித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நலம் விசாரித்தார். தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றத்தில் 2-வது நாள் கூட்டம் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, எம்.பி பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடி இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் நேற்று பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்றபோது, ராகுல் காந்தி நீண்ட நேரம் சாலையிலேயே நின்று நகர மறுத்தார். பல காவல்துறையினர் அவரைச் சூழ்ந்துகொண்டு வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றதை வீடியோக்களில் பார்க்கமுடிந்தது. இதனால் அவருக்கு மூக்கு மற்றும் மார்புப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியால் பகிரப்பட்ட ராகுல் காந்தியின் புகைப்படத்தில், அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிவதை பார்க்க முடிந்தது.

இந்தசூழலில் தான் ராகுல்காந்தி வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தவெக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

தவெக கண்டனம்..

தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.

நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என பதிவிடப்பட்டுள்ளது.

Spread the love