July 30, 2026

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 9 பதக்கம் உறுதி | CWG 2026

குத்துச்சண்டையில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தின் நிக்கோல் கிளைடை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரியா கங்காஸ் 4-1 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் நியாம் மிட்செல்லை தோற்கடித்து அரை இறுதியில் நுழைந்தார்.

51 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாக் ஷி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தின் கேட்லின் ஃப்ரையர்ஸையும், அருந்ததி சவுத்ரி 3-1 என்ற கணக்கில் நியூஸிலாந்தின் மோர்கன் ஹென்டர்சனையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினர். இதன் வாயிலாக இவர்கள் 4 பேரும் குறைந்த பட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்தனர்.

ஆடவருக்கான 55 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ஜதுமணி 5-0 என்ற கணக்கில் ஸாம்பியாவின் வெங்கோ ம்வாலேவை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் ஜதுமணியும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதேவேளையில் 65 கிலோ எடைப் பிரிவில் பர்வீன் ஹூடா 2-3 என்ற கணக்கில் இங்கிலாந்தின் சாஷா ஹிக்கியிடமும், 90 கிலோ எடைப் பிரிவில் கபில் பொகரியா 0-5 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தின் ராபர்ட் மெக்நல்டியிடமும் வீழ்ந்தனர்.

60 கிலோ எடைப் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சச்சின் சிவாச் 5-0 என்ற கணக்கில் போட்ஸ்வானாவின் ட்ரெஷர் மொரேமியையும், 80 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அங்குஷ் யாதவ் 5-0 என்ற கணக்கில் சீஷெல்ஸைச் சேர்ந்த ஜேட் மைக்காக்கையும், 90+ கிலோ எடைப் பிரிவில் நரேந்தர் பெர்வால் 3-2 என்ற கணக்கல் சமாவோவின் மைக்கேல் சேகோவையும் வீழ்த்தி வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இதன் மூலம் இவர்களும் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். இதுவரை குத்துச்சண்டையில் மட்டும் இந்திய வீரர், வீராங்கனைகள் 9 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

Spread the love