சென்னை: மதிப்புக் கூட்டப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி மாநிலமாக உருவெடுக்கும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில் துறை செயலர் பிரதீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய வர்த்தகம், தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், மத்திய பெட்ரோகெமிக்கல்ஸ் பொறியியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் இந்த ஆண்டுக்கான தொழில் துறை மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது.
தமிழக குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் பிரதீப் யாதவ் இதை தொடங்கி வைத்து பேசியதாவது: வாகன உதிரிபாகங்கள், பொறியியல், மருத்துவம், மின்னணுவியல் என பல்வேறு துறைகளின் பயன்பாடுகளுக்கான பிளாஸ்டிக் பொருட்களில் கவனம் செலுத்துவதன் மூலம், மதிப்புக் கூட்டப்பட்ட பிளாஸ்டிக் பொருள் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழகம் உருவெடுக்கும்.
மேலும், மாநிலத்தின் வலுவான தொழில் துறை சூழல், உலகத் தரத்திலான துறைமுக உள்கட்டமைப்பு மற்றும் 23 லட்சத்துக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆகியவை ஏற்றுமதி வளர்ச்சிக்கான வலிமையாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
‘இந்தியாவின் புதுமை மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியின் எதிர்காலம்’ என்ற மையக் கருத்துடன் மாநாடு நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட கொள்கை வகுப்பாளர்கள், தொழில் துறை தலைவர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழில்நுட்பம் வழங்குவோர், நிதி நிறுவனங்கள், கல்வியாளர்கள், குறு சிறு நடுத்தர தொழில் துறையினர் பங்கேற்று, உலகளாவிய பிளாஸ்டிக் துறையில் இந்தியாவின் போட்டித் திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதித்தனர்.
இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள், பெட்ரோகெமிக்கல் துறையின் எதிர்காலம், பொறியியல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்களின் அமர்வுகள் நடைபெற்றன.
இதில் பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் இயக்குநர் ஸ்ரீபாஷ் தாஸ்மொஹபத்ரா, பிரான்ஸ் தூதரக துணைத் தலைவர் கிறிஸ்டோஃப் பிரமூல், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரக கூடுதல் தலைமை இயக்குநர் ராஜலட்சுமி தேவராஜ், பிளாஸ்டிக் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிராந்திய இயக்குநர் (தெற்கு) ரூபன் ஹோப்டே பங்கேற்றனர்.

More Stories
“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” – டிகே.சிவகுமார் வேண்டுகோள்
மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடல் சீற்றம்: பாம்பன் – குருசடை தீவு படகு சவாரி நிறுத்தம்
செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் – டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உத்தரவு