August 5, 2026

சர்ச்சைப் பேச்சு: உதயநிதிக்கு அமைச்சர்கள் அருண்ராஜ், ராஜ்மோகன், கீர்த்தனா கண்டனம்

சென்னை: சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு விவசாயிகளின், பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி நீர் பிரச்சினையில் நமது முதல்வர் சட்ட நடவடிக்கைகள் உட்பட பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,

நாங்களும் போராடுகிறோம் என ஷோ காட்டும் விதமாக ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக நடத்திய ஆர்பாட்டத்தில் தனது சுய ரூபத்தை வெளிக்காட்டி விட்டார் மாண்பு இல்லாத எதிர்க்கட்சித் தலைவர். சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு நாகரீகமாக பேச வராது என்பதை தஞ்சாவூரில் மேடை போட்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ஆபாசநிதி.

காவிரியை நம்பி இருக்கும் ஒட்டுமொத்த விவசாய பெருமக்களையும், ஒட்டுமொத்த பெண்களையும், ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே இழிவுபடுத்துகிற வகையில் அவருடைய ஆபாச மேடைப் பேச்சு அருவருப்பூட்டுகிறது. மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுதான் திமுகவின் டிஎன்ஏ.

காவிரி பிரச்சினையில் ஆபாசநிதியின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்பதையும், அவருடைய சாக்கடை சிந்தனையின் துர்நாற்றத்தையும் தமிழ்நாடு உணர்ந்து கொண்டு விட்டது.

பெயர் தான் U வில் தொடங்குகிறது. மற்றபடி அவரது சிந்தனை செயல்பாடு எல்லாமே A தான். இப்படிப்பட்ட ஆபாச நிதியின் கைகளில் தான் அண்ணா தொடங்கிய திமுக சிக்கப் போகிறது என்பது அண்ணாவையே அவமானப் படுத்துவதாகும். சிங்கப் பெண்கள் நிறைந்த தமிழகத்தில் அசிங்க அரசியல் செய்யும் ஆபாச நிதி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது. ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தின் அரசியல் பண்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உதயநிதி பேசிய ஆபாசப் பேச்சுக்கு வன்மையான கண்டனம்.

பொது மேடைகளில் பேசப்படும் வார்த்தைகள் அரசியல் நாகரிகத்தையும், சமூகப் பொறுப்பையும் பிரதிபலிக்க வேண்டும். ஆனால் அண்மையில் உதயநிதி பேசிய பேச்சு, பெண்களின் கண்ணியத்தையும், சமூகத்தின் நாகரிக விழுமியங்களையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கருத்து வேறுபாடுகள் அரசியலில் இயல்பானவை. ஆனால் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலோ, இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளாலோ, ஆபாசமான மொழியாலோ கருத்துகளை வெளிப்படுத்துவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் மேடை என்பது மக்களுக்கு வழிகாட்டும் இடமே தவிர, பெண்களின் மாண்பைக் காயப்படுத்தும் வார்த்தைகள் ஒலிக்கும் இடமாக மாறக் கூடாது.

தமிழ்நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள் அனைவரும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசப்படும் எந்தவொரு வார்த்தையும் ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையே அவமதிப்பதாகும். பெண்களை மதிக்கத் தெரியாதவர்களுக்கு, மக்களின் மனதை மதிக்கவும் தெரியாது என்பதை இத்தகைய பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.

Spread the love