டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியுடன் மோதல் இல்லை என்று அந்த நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் இணைந்து நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ் தபா காமேனி புதிய உச்ச தலைவராக பதவியேற்றார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதலில் மொஜ்தபாவும் படுகாயம் அடைந்தார். ஈரான் அதிபராக மசூத் பெசெஷ்கியன் பதவி வகித்தாலும் மதத் தலைவர் மொஜ்தபா காமேனியே ஆட்சி நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இதனிடையே பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் ஈரான் ராணுவம் தன்னிச்சையாக செயல்பட்டு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் உருவானது.
இந்த விவகாரத்தில் அதிபர் பெசெஷ்கியனுக்கும் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ஈரான் ராணுவம், அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்த சூழலில் பெசெஷ்கியன் தொலைக்காட்சியில் நேற்று பேசியதாவது: சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது போன்று ஈரானிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த எதிரிகள் (அமெரிக்கா, இஸ்ரேல்) திட்டமிட்டனர்.
48 மணி நேரத்தில் ஈரானை வீழ்த்தி விடலாம் என்று அவர்கள் கருதினர். ஆனால் எதிரிகளின் சதிகளை, தாக்குதல்களை ஈரான் வெற்றிகரமாக முறியடித்தது. உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் தலைமையில் கீழ் ஒட்டுமொத்த மக்களும் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். காமேனியின் வழிகாட்டுதல்களால் எதிரிகளின் தாக்குதல்களை ஈரான் மக்கள் துணிவுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போதைய சூழலில் அவரை நேரடியாக தொடர்பு கொள்வது கடினம். எனினும் அவர் எழுத்துப்பூர்வமாக அனைவருடனும் தொடர்பில் இருக்கிறார். எனக்கும் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை. தற்போதைய சூழலை பயன்படுத்தி சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு
7 மணி நேரம் விண்வெளியில் நடந்த இந்திய வம்சாவளி வீரர்
இம்ரான் கான் விடுதலை கோரி போராட்டம்: 100+ ஆதரவாளர்கள் கைது